5 ஆண்டுகளுக்குப் பிறகு 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு (4.8.2013) அன்று முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது. அதற்குப் பிறகு தற்போது நிரம்பியுள்ளது. இது அனைவரையும் ஆனந்தக் கூத்தாட வைத்திருக்கிறது.

தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களாகவே ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்தது. தற்போது 70,000 கன அடிக்கு மேல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை

இன்று காலை 8 மணி நிலவரப்படி  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 119.41 அடியாக உயந்துள்ளது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியை எட்டுவதற்கு இன்னும் 1/2 அடி மட்டுமே இருந்த நிலையில், தற்போது மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே படிபடியாக வெளியேற்றப்படும். நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை போட்டு  16 கண் பாலம் வழியாக 7,500 கன அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்கள். அணை கட்டப்பட்டதிலிருந்து 38 முறை மட்டுமே அணையின் முழுக் கொள்ளளவை எட்டி இந்த வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 39-வது முறையாக 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதை வெளியூர்களிலிருந்து வந்து மக்கள் பார்வையிடுகிறார்கள்.

அணை சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 400 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மொத்தம் 30,400 கன அடி நீர் வெளியேறுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு தண்டூரா மூலம்  எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தற்போது அணை நிரம்பியுள்ளதால் மேலும் நீரின் அளவு வெளியேற்றப்படும். இதனால் வெள்ளப் பெருக்கு அதிகமாவதால் கரையோர மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லவும் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக யாரும் ஆற்றுக்குள் இறங்கக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!