மாணவிகள், ஆசிரியைகளை ஓடவைத்த தேனீக்கள்! - லீவு விடப்பட்ட அரசுப்பள்ளி

நெல்லையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து மாணவிகளையும் ஆசிரியைகளையும் கொட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. அதனால், பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. 

தேனீக்கள்

நெல்லை டவுன் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஜவஹர் உயர் நிலைப்பள்ளி மற்றும் கல்லணை மேல் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மொத்தம் 4,700 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த இரு பள்ளிகளுக்கும் நடுவில் உயர்ந்து வளர்ந்த நெட்டிலிங்க மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூடுகட்டியிருக்கின்றன. தற்போது நெல்லை மாவட்டம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது. 

இந்த நிலையில், வேகமாக வீசிய காற்றில் தேன் கூடு கலைந்தது. அதனால் கூட்டில் இருந்து வெளியேறிய தேனீ அனைத்தும் பள்ளியின் வகுப்பறைகளுக்குள் நுழைந்தன. பாடங்களைப் படித்துக்கொண்டிருந்த கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 31 பேரை கொட்டின. அதைத் தொடர்ந்து அருகில் இருந்த ஜவஹர் உயர் நிலைப்பள்ளிக்குள்ளும் நுழைந்து மாணவர்களை கொட்டின. 

அதனால் இரு பள்ளிகளிலும் இருந்த மாணவர்கள் வகுப்புகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார்கள். தேனீக்கள் கொட்டியதில் ஆசிரியைகளும் தப்பவில்லை. 5 ஆசிரியைகளைக் கொட்டியதால் பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக மாநகராட்சிப் பணியாளர்கள் விரைந்து வந்து புகை மூலம் விரட்டினார்கள். 

மாநகராட்சி பள்ளி

ஆனால், தேன் கூட்டிலிருந்து கலைந்து பள்ளி வளாகத்துக்குள் வந்ததே தவிர வெளியேறவில்லை. அதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை கலைத்தார்கள். இந்தச் சம்பவம் காரணமாக ஜவஹர் பள்ளிக்கும் கல்லணை பள்ளிக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!