தமிழகம் முழுவதும் சொத்து வரி 100 சதவிகிதமாக உயர்வு - அரசாணை வெளியீடு!

சொத்து வரியை 50 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு

தமிழகம் முழுவதும் இடத்துக்கு ஏற்றாற்போல் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சொத்துவரி ஏற்றவில்லை. இதனால் நிறைய பகுதிகளில் சொத்துவரி வசூலிக்கப்படாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனப் புகார் எழுந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது இந்தக் குற்றச்சாட்டு எதிரொலித்தது. இதையடுத்து சொத்துவரியை மாற்றாதது குறித்து கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் சொத்துவரியை மாற்றியமைப்பது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சொத்து வரியை 50 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும், ஒரே மாதிரி சொத்துவரி இருக்கும் வகையில் புதிய சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மூன்று விதமாக சொத்து வரி பிரிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதி, வாடகை குடியிருப்புப் பகுதி மற்றும் குடியிருப்பு இல்லாத பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிதமும் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் நடப்பு ஆறு மாதங்களுக்கான சொத்து வரியிலேயே இந்தப் புதிய சொத்து வரி முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!