`27 அடி சாலை 10 அடியானது!'- தொடர் மழை; மண் சரிவு அச்சத்தில் நீலகிரி மக்கள்! | Heavy rains causes landslides in Nilgris district

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (23/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (23/07/2018)

`27 அடி சாலை 10 அடியானது!'- தொடர் மழை; மண் சரிவு அச்சத்தில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டம்  ஊட்டி காந்தல் புது நகர் பகுதியில், சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். காந்தல் முக்கோணம் அல்லது பெனட் மார்க்கெட் வரை பஸ்சில் வரும் பாெதுமக்கள், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை ஆட்டாே மூலமாகவோ, நடந்தாேதான் புதுநகர் வர வேண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கன மழையால், புதுநகர் செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். சரிந்த மண் அப்புறப்படுத்தப்பட்டாலும், பாெதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சேறும் சகதியுமாக உள்ள சாலையில் மீண்டும் மண் சரியுமோ என்ற அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மண் சரிவு அச்சத்தில் பொதுமக்கள்

இதுகுறித்து, அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்துவரும் கிருஷ்ணன் என்பவர் கூறுகையில், ‛‛காந்தல் முக்கோணம் மற்றும் பெனட் மார்க்கெட்டிலிருந்து புதுநகர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த ஒரு கிலாே மீட்டர் தூரத்துக்கு 27 அடி அகல சாலை இருந்தது. காலப்போக்கில், ஆக்கிரமிப்புக்களால் அகலம் குறைந்துகொண்டேபோய், நகராட்சி மூலம் தற்போது, 10 அடி அகலத்தில் கான்கிரீட் சாலை  அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஒருபுறம் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த முறை மண் சரிவு ஏற்பட்டதிலிருந்து, ஆம்புலென்ஸ் வாகனங்கள் முக்கோணம் அல்லது பெனட் மார்க்கெட் வரைதான் இயக்கப்படுகின்றன. நோயாளிகளைப் புதுநகரிலிருந்து தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டியுள்ளது. அதேபோல, அத்தியாவசியப் பாெருளான சிலிண்டர் வாகனங்களும் இப்பகுதிக்கு  வருவதில்லை.  அல்லது ஆட்டாேவில்தான் வீடுகளுக்கு எடுத்து வர வேண்டியுள்ளது. கடந்த  இரண்டு வாரங்களில், இரண்டாவது முறையாக இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், காந்தல் புதுநகரில் வசிப்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறோம். தடுப்புச் சுவர் அமைப்பதுடன், இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை புதுநகர் வரை வந்து சேறும் அளவுக்கு சாலையை விரிவுபடுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தபோது,  மண் சரிவுகுறித்து அவர்களுக்கு நாேட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்தார்’’ என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க