வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/07/2018)

கடைசி தொடர்பு:18:30 (23/07/2018)

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

``தூத்துக்குடியில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும்தான் நோய்கள், பாதிப்புகள் ஏற்படுகிறதா, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்” என தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமத்து மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.   

ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற மக்களின் 100வது நாள் முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பின், கடந்த மே 28-ம் தேதி ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தங்களின் தொழில் வாழ்வாதாரம் இழந்ததாகவும் ஆலையைத் திறக்க வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஆலையைத் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வந்த குமரெட்டியாபுரம் தெற்கு வீரபாண்டியாபுரம் மற்றும் மீளவிட்டான் ஆகிய 3 கிராம மக்கள், தற்போது ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளித்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமப் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் எங்கள் ஊரில் உள்ளவர்களும் பக்கத்து ஊரில் உள்ளவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக் கிடைத்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கிறோம். எங்கள் கிராமம் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு இந்த ஆலையின் சார்பில் இலவச மருத்துவ உதவி, குழந்தைகள் படிப்புக்கான ஊக்கத்தொகை, ஊர்த்திருவிழா, கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகியவற்றுக்காக நிதி உதவியைப் பெற்று வந்தோம்.

நாங்கள் இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். நோய் வருவது என்பது இயல்பான ஒன்று. தூத்துக்குடியில் பல தொழிற்சாலைகள் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும்தான் நோய்கள், பாதிப்புகள் ஏற்படுகிறதா. தற்போது இந்த ஆலை மூடப்பட்ட நிலையில், எங்களுடைய வருமானம், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டு, மிக மோசமான சூழ்நிலையில் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமலும் வருமானத்துக்கு வழி இல்லாமலும் தவித்து வருகிறோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்” என்றனர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டாம் எனவும் அதே கிராம மக்கள் தற்போது ஆலை வேண்டும் எனவும் இரண்டாவது முறையாக ஆர்ப்பட்டம் நடத்தி மனுவும் அளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க