தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? வீடியோவைச் சமர்ப்பிக்கிறது தமிழக அரசு! | thoothukudi protest video to be submitted in highcourt soon

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (23/07/2018)

தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? வீடியோவைச் சமர்ப்பிக்கிறது தமிழக அரசு!

தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம், காவல்துறையா அல்லது போராட்டக்காரர்களா என்பதை அறிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வீடியோ போட்டுக்காட்ட அரசுத் தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? வீடியோவைச் சமர்ப்பிக்கிறது தமிழக அரசு!

தூத்துக்குடி கலவர வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட `மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய' ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனால் ஜாமீன் வழங்கப்பட்டு, சில நாள்களுக்கு முன் சிறையிலிருந்து அவர் வெளிவந்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட `மக்கள் அதிகாரம்' மதுரை நிர்வாகிகள் சதீஷ், முருகேசு, குமரெட்டியாபுரம் மகேஷ், ராஜ்குமார், `நாம் தமிழர் கட்சி'யைச் சேர்ந்த வியனரசு ஆகியோருக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாமீன் வழங்கியுள்ளார்.

கலவரக்காரர்கள் என்று போலீஸாரால் குறிவைக்கப்பட்ட ஒவ்வொருவர் மீதும் குறைந்தது பத்து வழக்குகளிலிருந்து 90 வழக்குகள் வரை பதியப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அடுத்த வழக்கைப் போட்டு சட்டத்தை கேலிக் கூத்தாக்குவதாகவும், அதனால், உயர் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதகாவும் `மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய'த்தினர் கூறுகிறார்கள். பொய் வழக்கில் சிக்கியுள்ள கட்சி, அமைப்புச் சார்ந்தவர், எதிலும் சாராதவர்களின் விடுதலைக்காகவும், 13 பேர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும் சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கையுள்ளது என்றும் சொல்கிறார்கள் அவர்கள். 

தூத்துக்குடி கலவரம்

இந்த நிலையில், தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம், காவல்துறையா அல்லது போராட்டக்காரர்களா என்பதை அறிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வீடியோ போட்டுக்காட்ட அரசுத் தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையைப்போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நடந்து வருகின்றன. 

இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி விசாரித்தபோது, அரசுத் தரப்பில் அப்போது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ``ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தாக்கப்பட்டனர். அவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் பொதுமக்களைக் காத்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவைப் பார்த்தால் போலீஸார் கையாண்ட முறை சரியானது என்பது தெரிய வரும். இந்த வீடியோவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகளும் காண உள்ளனர். இங்கு தாங்களும் பார்க்க வேண்டும்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார். 

தூத்துக்குடி கலவரம்

அதற்கு பதிலளித்த நீதிபதி கிருபாகரன், ``அந்த வீடியோவை முதலில் பொது மக்களுக்குப் போட்டுக் காட்டுங்கள், அதன் பிறகு நாங்கள் பார்க்கிறோம். போராட்டத்தில் முதலில் போலீஸ் அத்துமீறினார்களா அல்லது போராட்டக்காரர்கள் அத்துமீறினார்களா என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்'' என்று கூறினார். இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பிறகு கலவர வழக்கில் உயர் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்படும் வீடியோ காட்சிகள் எடிட் செய்யப்படாமல் அப்படியே காட்டப்படுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் ஹென்றி டிபேன் தலைமையில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்த `உண்மை அறியும் குழு'வின் விசாரணை அறிக்கையை தூத்துக்குடியில் வெளியிடும் நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் அனுமதியளிக்காமல் பல முட்டுக்கட்டைகளை போட்டுள்ளனர். நிகழ்ச்சி நடத்துவதற்கு பல விதிகளை விதித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். காவல்துறையின் இடைஞ்சலைத் தாண்டி நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்