`தூத்துக்குடி நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல!’ - மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

'தூத்துக்குடி சிப்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல' என்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா, தூத்துக்குடி நிலத்தடி நீரின் தன்மைகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், 'தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது. அந்த நீரில், ஈயம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு ஆகியவற்றின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக உள்ளது' என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி நிலத்தடி நீர்குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'தூத்துக்குடி சிப்காட் பகுதியில், மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், இந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீரில் ஈயம், கேட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு ஆகியவற்றின் அளவுகள் பி.ஐ.எஸ்ஸால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலைக்கு அடியிலுள்ள நிலத்தடி நீரில் ப்ளூரைடு, கேட்மியம், நிக்கல், அயர்ன் ஆகிய கனிமங்களின் அளவுகள் அதிகமாக உள்ளது என்று தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!