பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுதான் வழி! - பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி | Sexual abuse can not be prevented if there is no perfect prohibition in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (23/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (23/07/2018)

பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுதான் வழி! - பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி

'தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவராதவரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது' என பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி விஜயா ரகட்கர் தெரிவித்தார்.

விஜயா ரகட்கர்

பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி விஜயா ரகட்கர், நாகர்கோவிலில் மகளிரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறந்த பெண்களுக்கான விருதுகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளேன். முதல்கட்டமாக, மதுரையில் மாநாட்டில் கலந்துகொண்டேன். இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நாளை, சென்னையில் நடக்கும் ஜைனர்களின் மாநாட்டில் கலந்துகொள்கிறேன். அதைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்கிறேன். மதுரையில் மகளிர் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சியைப் பார்த்தபோது, தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியது. மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த கட்சி பா.ஜ.க என்பது மதுரையில் நிரூபணமானது. இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சிசெய்த தமிழகத்தில், மக்களின் மூன்றாவது பார்வை பா.ஜ.க பக்கம் திரும்பியுள்ளது.

விஜயா ரகட்கர்

அடுத்த தேர்தலில், தமிழகத்தில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படும். மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களை அதிகமாகக் கொண்டு வந்திருக்கிறது. பெண்கள் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி கழிவறைகள் அமைத்தல் மற்றும் முத்ரா வங்கித் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இலவச காஸ் இணைப்பான உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் அதிகமாகப் பயன்பெறுகிறார்கள். முத்தலாக் சட்டத் திருத்தம் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு 26 மாத விடுப்பு வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த்த திட்டங்கள்மூலம் பா.ஜ.க, தமிழகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். பா.ஜ.க தமிழகப் பண்பாடு கலாசாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னிறுத்திவருகிறது.

மகளிரணி நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகிறது. சிறுமிகளை பாலியல் கொடுமைசெய்தால் தண்டிக்கும் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாரதத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவராதவரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. பாலியல் வன்கொடுமைகள் நடந்தால், பா.ஜ.க போராட்டம் நடத்தும்" என்றார்.