பழங்குடியின மாணவியின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய கலெக்டர்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தைச் சார்ந்தவர் பழங்குடியின மாணவி சுமத்திரா. 2018-ல் நடந்த 12-ம் வகுப்பு தேர்வில் 978 மதிப்பெண்கள் பெற்றார். அவர் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட்ட நீட் பயிற்சியைக் கற்று அதிலும் வெற்றி அடைந்தார். இவருக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஓர் ஆண்டுக்கு 6 லட்சத்துக்கு மேல் செலவாகும் எனத் தெரிந்த பின்னர், இதைக் கட்ட முடியாது. இந்த மருத்துவப் படிப்பு வேண்டாம் என கூலித்தொழிலாளியான தன் தந்தையுடன் மலைக்கிராமத்துக்கே திரும்பிவிட்டார் மாணவி சுமத்திரா.

மாணவி சுமத்திரா

சில நாள்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கா.சு.கந்தசாமி, சுமத்திராவுக்கு படிக்கக் கிடைத்த கல்லூரியைத் தொடர்புகொண்டார். சுமத்திரா கல்லூரி சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கேட்டுக்கொண்டார். இன்னொருபுறம், சுமத்திரா படிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கும் தேவையான 17 லட்சம் ரூபாயை சில அமைப்புகள் கொடுக்க முன்வந்தன. இதனால், சுமத்திராவின் கனவு நிறைவேறியிருக்கிறது. இன்று, அவர் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். ஜவ்வாது மலைப் பகுதியில் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் முதல் மாணவி சுமத்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!