பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதுச்சேரி மாணவர்களின் சைக்கிள் பயணம்!

 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி-கன்னியாகுமாரி இடையே மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

சைக்கிள் பயணம்

சமீபகாலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நிகழ்ந்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன், சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையில் 17 பேர் சம்பந்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் வெளிவந்த பின்னரும் ஆங்காங்கே பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடப்பது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகள்மீது இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து அவர்களைக் காக்க வலியுறுத்தி, புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். புதுச்சேரி ஆச்சார்யா பொறியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அரவிந்த், நரேஷ், கிருஷ்ணன், சாதிக் பாட்சா ஆகிய 4 பேரும், கடந்த 18-ம் தேதி புதுச்சேரியில் இருந்து தங்கள் விழிப்புஉணர்வு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர். கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நேற்று வந்த இவர்கள், இன்று கன்னியாகுமரி நோக்கி பயணித்தனர். செல்லும் வழியில், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்கிச் சென்ற இவர்கள், கன்னியாகுமரியிலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு இம்மாதம் 30-ம் தேதி சென்றடைவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!