ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்குத் தடை! தஞ்சை ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு

தஞ்சாவூரில்,  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கக் கோரியும், கும்பகோணம் பகுதியில் நீரில் கரையாத வகையிலான ராசாயனம் கலந்த பொருள்களைக்கொண்டு விநாயகர்  சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ள. இவற்றைக் கரைக்கும் போது, நீர் மாசுபடும்; சுற்றுச்சூழலும் பாதிக்கும். அந்தச் சிலைகளை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றுவதோடு, அவற்றை விற்பதற்கும் தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் கையில் விநாயகர் சிலையுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விநாயகர் சிலையுடன் மனு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அண்ணாத்துரை  தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இந்து மக்கள் கட்சியின்  மாவட்டத் தலைவர் பாலா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊர்வலத்தின்போது, கட்டுப்பாடு விதிப்பது என்கிற பெயரில் ஊர்வலத்தில் கூடுதலாக விநாயகர் சிலை எடுத்துச் செல்வதற்கும், யானை, குதிரை  மற்றும் வாண வேடிக்கைகளுக்கும் போலீஸார் தடை விதித்துள்ளனர். இந்தத் தடைகளை நீக்க வேண்டும். மேலும், கும்பகோணம் நகர் பகுதிகளைச் சுற்றி ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அலங்கார பொம்மைகள், பூஜை அறையில் வைக்கும் சுவாமி பொம்மைகள் விற்பனைசெய்துவருகிறார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்படும் கடவுள் உருவ பொம்மைகள் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஆண்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக எந்த  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதுார் பகுதிகளில் நீரில் கரையாத வகையிலான ராசாயனம் கலந்த பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. இந்தச் சிலைகள், நீரை மாசுபடுத்துவதோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கும். எனவே, இதுபோன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் தயாரிக்கப்படும் சிலைகளைத் தடுப்பதோடு, அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பில் கைப்பற்ற வேண்டும். அதிக இடங்களில் விநயாகர்  சிலைகளை வைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம்’’ என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!