வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (23/07/2018)

கடைசி தொடர்பு:20:40 (23/07/2018)

`பொங்கிவரும் காவிரி!’ - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம்

`காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால், கொள்ளிடம் ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், ஆற்றைக் கடக்க வேண்டாம்’ என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  

காவிரி

கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையின் காரணமாகக் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அதையடுத்து. கடந்த 19-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சகிதமாகத் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் கூடுதலாக திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், காவிரி நீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாரு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் டெல்டா பாசன விவசாயத்துக்காக நேற்றுக் காலை கல்லணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.

``திறந்து விடப்பட உள்ள காவிரி நீர் கடைமடை வரை செல்லும் வகையில், தமிழக அரசு விரைவாகக் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதே போல காவிரி நீரைத் தேக்கி வைக்க ஏதுவாகக் காவிரியின் நடுவே ஆங்காங்கே தடுப்பணைகள் மற்றும் கதவணைகளைக் கட்ட வேண்டும். அப்போதுதான் காவிரி நீரை முழுமையாக நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்த முடியும்’’ என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி, மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகணன், வட்டாட்சியர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கம் ஆகியோர் சகிதமாகத் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார். காவிரி ஆற்றில் நேற்று (22.07.2018) மதியம் முதல் 20,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது, மாலையிலிருந்து 30,000 கனஅடி தண்ணீராகத் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று 40,000 கனஅடி தண்ணீராக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. அதன் விளைவாக இன்று மாலை முதல் 40,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரவாய்ப்புள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் தண்டோரா போட்டும், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி மூலமாகவும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடமான முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை, அம்மா மண்டபம், ஓயாமாரி படித்துறை ஆகிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர்

காவிரி ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கைப் பார்ப்பதற்குச் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாக ஆற்றில் இறங்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. சிறிய கவனக்குறைவால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடடிய நிலை உருவாகும். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரையைக் கடக்கவோ தண்ணீரில் இறங்கிக் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியத்திலிருந்து 25 இடங்கள் அபாயகரமான பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி, தீயணைப்புத்துறை காவல்துறை ஆகிய துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து காவிரியில் வரும் தண்ணீரை கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.  

மேலும்,  தமிழக முதல்வரின்  உத்தரவின்படி நமது மாவட்டத்தில் உள்ள 75 பெரிய ஏரிகள் காவிரி ஆற்றுநீரை முழுமையாக நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க