பெண் குழந்தைகளைக் காக்க 1,000 கி.மீ சைக்கிள் பயணம்! - இளைஞர்களை நேரில் வாழ்த்திய ஆட்சியர்

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி விழிப்பு உணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட  நான்கு  இளைஞர்கள், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். 

’பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்ற கருத்தை வலியுறுத்தி,  புதுச்சேரியில் உள்ள "smile welfare organisation" என்ற அமைப்பைச் சேர்ந்த,  நான்கு இளைஞர்கள், புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1,000 கி.மீ., தூரத்துக்கு சைக்கிள்களில் விழிப்பு உணர்வுப் பயணம் மேற்கொண்டுள்ள கிருஷ்ணன், அரவிந்தன், சாதிக் பாட்ஷா மற்றும் நரேன் ஆகிய நான்கு இளைஞர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்களுக்கு, மாவட்ட சைல்டு லைன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து தங்களது விழிப்பு உணர்வுப் பிரசார சைக்கிள் பயணம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, அவர்களிடம் பேசிய ஆட்சியர், அவர்களைப் பாராட்டி அனுப்பிவைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய  நான்கு பேரில் ஒருவரான சாதிக் பாட்ஷா, “பெண்குழந்தைகளுக்கு  பாலியல்ரீதியான தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இக்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திட வேண்டும். பெண்குழந்தைகளைச் சீண்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்.  

பெண் குழந்தைகளுக்கு ’குட் டச்’, ’பேட் டச்’ என்பது குறித்து தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதுச்சேரியிலிருந்து கடந்த 18-ம் தேதி, நான்கு பேரும் இந்த விழிப்புஉணர்வு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினோம். புதுச்சேரியிலிருந்து கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, ராமேஸ்வரம் வழியாக தூத்துக்குடி வந்தோம். சுமார் 1,000 கி.மீ., தூரத்தில் 750 கி.மீ.,  தூரம் வரை பயணம் மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து, நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்று, எங்கள் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறோம். வரும் வழிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் எங்களது பிரசாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துச் சொன்னபடியே வருகிறோம். அத்துடன், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு துண்டுப்பிரசுரமும் வழங்கி வருகிறோம்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!