`வாட்ஸ் அப், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ஆதார்!’ - கிருஷ்ணசாமியின் அடடே யோசனை

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க சமூக வலைதளங்களே காரணம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  தெரிவித்தார். 

டாக்டர் கிருஷ்ணசாமி

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ,1999-ம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். அப்போது, தாமிரபரணி ஆற்றுக்குள் ஓடிய மக்களையும் போலீஸார் விரட்டிச் சென்று தாக்கினார்கள். அதில், விக்னேஷ் என்ற கைக்குழந்தை உள்ளிட்ட 17 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர். 

அந்தச் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்கள் சார்பாக தாமிரபரணியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் , புதிய தமிழகம், ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட 32 அமைப்புகள் சார்பாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.  

புதிய தமிழகம் கட்சி சார்பாக, அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து பேரணியாகப் புறப்பட்டு, கொக்கிரகுளம் தாமிரபரணி நதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’உயிரிழந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரிக்க சமூக வலைதளங்களே காரணம். அவற்றைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால்தான், அதிக குற்றங்கள் நடக்கின்றன. அதனால், சமூக வலைதளங்களை முறைப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் புதிய கணக்குகளை ஆதார் போன்ற அடையாள அட்டைகளைப் பெற்ற பிறகே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ச் சமூதாயம் சீரழிந்துவிடும்’’ எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!