வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (23/07/2018)

கடைசி தொடர்பு:21:04 (23/07/2018)

ராகுலுக்கு கட்டிப்பிடி வைத்தியம் சொல்லிக்கொடுத்தது கமல்தான்! - ஹெச்.ராஜா கிண்டல்

``ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தபோது, `வசூல் ராஜா எம்.பி.பிஎஸ்’ படத்தில் வருவதைப்போல, கட்டிப்பிடி வைத்தியத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டார் என நினைகிறேன். அதனால்தான் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மோடியைக் கட்டிப்பிடித்துள்ளார்” என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ``பார்வையற்றவர்கள் ராஜபார்வை பார்ப்பதுபோல, ஒருநாள் முழுவதும் பொழுதைப்போக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் தங்களின் எண்ணிக்கையைத் தெரிந்தும், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். இதில், பார்லிமென்ட்டில் ஓட்டே இல்லாத தி.மு.க எதிர்க்கட்சிகளுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.

தமிழகத்தில் நீண்டகால பிரச்னையாக இருந்த காவிரி பிரச்னைக்குத் தீர்வு கண்டது மோடி அரசுதான். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்குத் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் மோடி அரசை, அ.தி.மு.க ஆதரித்துள்ளது. கடந்த 2011, 2012-ம் ஆண்டுகளில் திரிபுராவில் 1.2 சதவிகித ஓட்டுகளும் மணிப்பூரில் 1.3 சதவிகித ஓட்டுகளும் மட்டுமே பெற்ற பா.ஜ.க, தற்போது அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல் வரும் பார்லிமென்ட்  தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க முழுமையான வெற்றி பெறும். மீண்டும் மோடிதான் பிரதமர். இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜி.எஸ்.டி வரி வசூல் மூலம் ஆண்டுக்கு 13 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில், தமிழகத்துக்கு முதல் 6 மாதங்களில் மட்டும் 4,300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ராகுல் காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தபோது, வசூல் ராஜா படத்தில் வருவதைப்போல, கட்டிப்பிடி வைத்தியத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார் என நினைக்கிறேன். அதனால்தான், பார்லிமென்ட்டில் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்துள்ளார்” என்றார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க