`நாட்டிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரே அரசு மருத்துவக் கல்லூரி இதுதான்!’ - கொதிக்கும் மாணவர் சங்கம்

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் புதுச்சேரி அரசை எச்சரித்து, இந்திய மாணவர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி

புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவருகிறது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி. இங்கு, மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது கல்லூரி நிர்வாகம். அதைக் கண்டித்து சுமார் 250 மருத்துவ மாணவர்கள் இரவு பகலாக மூன்று நாள் தொடர் போராட்டத்தை நடத்தினர். அதையடுத்து, 23-ம் தேதிக்குள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்பவில்லை என்றால், தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களின் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பி எச்சரித்தது கல்லூரி நிர்வாகம். அதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள், நேற்று முன் தினம் கல்லூரிக்குத் திரும்பினர். இந்நிலையில், இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தால் அநியாயமாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை  திரும்ப பெறக்கோரி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதற்கு, மாணவர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண்பதற்கு மாறாக, கல்லூரி நிர்வாகம் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மிரட்டியுள்ளது. இப்போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கல்லூரி நிர்வாகம் சர்வாதிகாரத் தொனியில் விடுதிகளில் கழிவறைகளைப் பூட்டியும், தொடர்ந்து போராடினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என அச்சுறுத்துவதும், போராடுவது தவறு என்பதுபோல சித்திரித்து, மாணவர்களின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதை இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேசக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடுவது தவறு என்பதுபோல சித்திரிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஏற்கெனவே புதுச்சேரியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வித சமூகக் கட்டுப்பாடுமின்றி செயல்பட்டுவருகிறது.

ஆனந்த்

இந்தச் சூழலில், அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டண உயர்வை நியாயப்படுத்தினால், தனியார் கல்வி நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். ஆகவே புதுச்சேரி அரசு, உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. இந்திய அளவில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் ஒரே அரசு மருத்துவக் கல்லூரி புதுச்சேரி கல்லூரிதான். மாணவர்களையும் பெற்றோர்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக-ஜனநாயக அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!