``ரஜினி களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல!" - உ.வாசுகி

நடிகர் ரஜினிகாந்த், எட்டு வழிச் சாலை திட்டத்தை 'நல்ல திட்டம்' என்று கூறுகிறார். அவர் என்றைக்காவது மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது பிரச்னைகளைக் கேட்டதுண்டா? அவர் அப்பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகு கருத்துக் கூற வேண்டும். களத்திற்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல.

``ரஜினி களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல!

'' 'பேசாதே, போராடாதே' என்று ஒரு மினி எமர்ஜென்சி போன்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதேநேரம், பேசுவதற்காகவும் போராடுவதற்காகவும் ஒரு பேரவையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இங்கு நடத்திக்கொண்டிருக்கிறது. வில்லாபுரம் தியாகி லீலாவதி உட்பட பல தியாகிகளைக் கொண்ட மண் இது. போராடினால் நாடு சுடுகாடாகிவிடும் என்கின்றனர் சிலர். போராடாவிட்டால் நாடு சுடுகாடாகிவிடும் என்கிறோம் நாம்'' என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் சி.பி.எம் தேசியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.

மதுரையில் இரண்டு நாள்கள் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உ.வாசுகி,  ``அரசு ஊழியர் என்றால் அரசுக்கு ஊழியம் செய்வதல்ல. மக்களுக்குச் சேவை செய்வதாகும். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, பல்வேறு உரிமைகளுக்காக அவரிடம் மோதிப்பார்த்த சங்கம்தான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இன்றைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் எண்ணற்ற போராட்டங்களை நடத்திவருகின்றனர். சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் மாநகரமே குலுங்கியது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பங்கு மகத்தானது. தலைமைச் செயலகத்தைப் பாதுகாக்க முள்வேலி போடவேண்டிய சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டது. எல்லா போராட்டங்களுமே வெற்றிபெற்றுவிடாது. ஒரு போராட்டம் தோல்வியடைந்துவிட்டால், அதற்காக சோர்வடைந்துவிடக் கூடாது. தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைக் களைந்து, முன்பைவிட எழுச்சியாகப் போராட்டங்களை நடத்த வேண்டும். தொடர்ந்து போராடுவதன் மூலமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

உரிமைகளைப் பாதுகாக்க முடியும். மத்தியில், மக்கள் விரோதக் கொள்கையைப் பின்பற்றிவரும் பா.ஜ.க அரசும், அதைப் பின்பற்றி தமிழகத்தில் அ.தி.முக அரசும் செயல்பட்டுவருகிறது. போராடவே கூடாது, யாரையும் விமர்சிக்கவே கூடாது என்கிறது தமிழக அரசு. யாரையும் கொள்கைபூர்வமாக விமர்சிப்போம், போராடுவோம் என்பதே நமது நிலை. மத்திய அரசும், மாநில அரசும் வளர்ச்சி, வளர்ச்சி என்கின்றது. வளர்ச்சி அவசியம்தான். அது யாருக்கான வளர்ச்சி, அது யாரை வளர்த்துவிடப் பயன்படுகிறது என்பதுதான் முக்கியம். சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்காக விளைநிலங்கள் விவசாயிகளின் அனுமதியின்றி கையகப்படுத்தப்படுகின்றன. இந்தச் சாலை அமைப்பதால் ஏற்படும் பாதகமான அம்சங்களை மக்களிடம் எடுத்துச்சொல்வது குற்றமா? கருத்துச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. 'ம்' என்றால் வனவாசம், 'ஏன்' என்றால் சிறைவாசம் என்ற நிலை உள்ளது. எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டெல்லி பாபுவை செங்கம் டி.எஸ்.பி., மிகவும் மோசமாக நடத்தினார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. எட்டு வழிச் சாலை அமைய உள்ள பகுதியில், பருத்திக்காடு என்ற கிராமமே அழியும் நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க இயற்கையைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ, அங்கு வாழும் மக்களைப் பற்றியோ தமிழக அரசோ, மத்திய அரசோ கவலைப்படவில்லை.

உ.வாசுகி

நடிகர் ரஜினிகாந்த், எட்டு வழிச் சாலை திட்டத்தை 'நல்ல திட்டம்' என்று கூறுகிறார். அவர் என்றைக்காவது மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது பிரச்னைகளைக் கேட்டதுண்டா? அவர் அப்பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகு கருத்துக் கூற வேண்டும். களத்துக்கே வராமல் அரசியல் நடத்துவது சரியானதல்ல. கோயம்புத்தூரில் குடிநீர் விநியோகத்தை 'சூயஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் விற்றுவிட முயற்சி நடைபெறுகிறது. தனியாரிடம் குடிநீரை விற்றுவிட்டால், சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அவர்கள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கவேண்டியிருக்கும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின்போது, கலெக்டரும்  டி.ஆர்.ஓவும் தூத்துக்குடியில் இல்லை. 13 பேரை சுட்டுக்கொன்றபின், இதற்கான உத்தரவைப் பெறுவதற்காக காவல்துறை அலைந்தது. பின்னர், துணை வட்டாட்சியர் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியளித்ததாக முன் தேதியிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் கையெழுத்துப் பெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசும் காவல்துறையும்தான் பொறுப்பு.  உரிமைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களைப் பேருந்து பேருந்தாக ஏறி கைதுசெய்தனர். ஆனால், பெண்களைத் தரக்குறைவாக சித்திரித்த நடிகர் எஸ்.வி.சேகரை மட்டும் காவல்துறை கைதுசெய்யவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், அவர் மட்டும் எப்படித் தப்பினார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்ரீதியிலான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இதுபோன்ற சமூகப் பிரச்னைகளிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்னைகளிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மக்களோடு நெருக்கமாக இருந்து, தங்களது பணிகளைச் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!