`ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை!’ - விவசாயிகள் கோரிக்கை | Madurai farmers files petition to district collector over 12 demands

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:01:30 (24/07/2018)

`ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை!’ - விவசாயிகள் கோரிக்கை

மேலூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் த.மா.க விவசாய அணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட விவசாயிகள் நலன்பெறும் வகையில்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் த.மா.க விவசாய அணி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில், "மதுரை மாவட்டத்தில் 2016 - 2018 வரை பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை இதுவரை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, பிரசித்திபெற்ற அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. தமிழக அரசு, ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்குவிக்கின்ற வகையில் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்க்கும் விவசாய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வீதம் உதவித்தொகை வழங்க வேண்டும். டி.ஆர்.ஓ தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்தி, விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர் வார வேண்டும். நுகர்பொருள் கழகத்தின்மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு 3000 ரூபாயாகவும் கரும்பு ஒரு டன்னுக்கு 4000 ரூபாயாகவும் உயர்த்தித் தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு 12 அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் தண்ணீரை உடனடியாக பாசனத்திற்காகத்  திறக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .