தீ விபத்து: முன்னெச்சரிக்கையாக ராமேஸ்வரம் கோயிலில் புதிய நவகிரக விளக்கு அமைப்பு

ராமேஸ்வரம் கோயில் நவகிரக சந்நிதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் நெய் தீபம் ஏற்றும் வகையில் புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கென பிரத்யேகமான பித்தளை விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் நவக்கிரக விளக்கு

கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கோயிலின் தொன்மை வாய்ந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன . கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலும் இந்தப் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முதல் கட்டமாக சுவாமி சந்நிதிக்குச் செல்லும் நுழைவு பிராகாரத்தில் பக்தர்கள் எண்ணை விளக்கு ஏற்றுவதற்குத்  தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக 4 அடி உயரம் கொண்ட  அணையா விளக்கு அமைக்கப்பட்டது. கோயிலில் விளக்கேற்ற விரும்பும் பக்தர்கள் இந்த விளக்கில் அமைக்கப்பட்ட புனல் வழியாக தாங்கள் கொண்டு வரும் எண்ணெய்யினை  ஊற்றி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நந்திமண்டபத்தில் அமைந்துள்ள நவகிரக சந்நிதியில் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு எள்  எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தனர். தற்போது பாதுகாப்பு கருதி இதுபோன்று தனியாக எள் எண்ணெய் தீபம் ஏற்றத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக நவகிரக சிலைகள் அமைந்துள்ளது போலவே நவகிரக விளக்குகள் ஒரே மேடையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்கில் உள்ள தீபங்களில் பக்தர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்துக்கு எண்ணெய்யிட்டு வழிபாடு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பித்தளையில் செய்யப்பட்டுள்ள இந்த நவகிரக விளக்கு பீடமானது இரண்டொரு தினங்களில் நவகிரக சந்நிதியில் நிறுவப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!