``வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்” - மேட்டூர் அணை திறப்பால் எச்சரிக்கும் மத்திய நீர்வள ஆணையம்!

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை

தென் மேற்குப் பருவ மழை காரணமாக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு கடந்த சில நாள்களாகவே ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்தது.  இதனால், மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், மேட்டூர் அணை கடந்த வாரம் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்குத் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால்,  அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலை சுமார் 75,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவே அது 80,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணையம் தனது ட்விட்டர் மூலம் காவிரி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ``இரவில் இருந்து 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளது.  
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!