வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (24/07/2018)

கடைசி தொடர்பு:09:10 (24/07/2018)

தனியார் நிலத்தில் நூதன முறையில் கொட்டப்பட்ட சாயக் கழிவுகள்!

திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலை நிறுவனம் ஒன்று பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் ரசாயனக் கழிவுகளை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சாய கழிவுகள்

திருப்பூரில் இயங்கி வரும் பல்வேறு  தனியார் சாய ஆலை நிறுவனங்கள், ரசாயனக் கழிவுநீர்களை சட்டவிரோதமாக  நீர்நிலைகளில் கலந்துவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதன்விளைவாக கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய நதியான நொய்யலாறு இன்றைக்கு முற்றிலுமாக நாசமடைந்து கிடக்கிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக் குப்பை கொட்டும் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளைக் கொட்டிக்கொண்டு இருந்த லாரிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மடக்கிச் சோதனை செய்தனர். அப்போது அந்த செப்டிக் டேங்க் லாரிகளில் சாயப்பட்டரைக் கழிவுநீர் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த லாரி ஓட்டுநர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்ணரை என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் சாய ஆலை நிறுவனத்தில் இருந்து தினந்தோறும் செப்டிக் டேங்க் லாரிகளில் சாயக் கழிவுகளை அள்ளிவந்து இப்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த சட்ட விரோதச் செயலைக் கடந்த சில வருடங்களாகவே அந்தச் சாய ஆலை நிறுவனம் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அதிகளவு குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் யாருக்கும் தெரியாமல் சாயக் கழிவுகளைக் கொட்டி வந்ததும், குறிப்பாக சாயக் கழிவுகள் தேங்கிவிடாமல் இருக்க, குப்பை கொட்டப்படும் இடத்துக்கு அருகில் உள்ள தனியார் நிலத்தில் பள்ளம் தோண்டி அதற்குள்ளும் சாயக் கழிவுகளைக் கொட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தூக்கி வீசப்படும் அதிகப்படியான குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அங்கு சாயக் கழிவுகளின் நாற்றம் பெரிதாக தெரியாமல் இருந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி வருடக்கணக்காக சாயக் கழிவுகளை அப்பகுதியில் கொட்டி வந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட சாய ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.