வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (24/07/2018)

கடைசி தொடர்பு:14:54 (24/07/2018)

மீண்டும் டி.எம்.சி அரசியல்..? இவ்வளவு நீரை எதற்காக வெளியேற்றுகிறது கர்நாடக அரசு?

நம் தேவைக்கு அதிகமாக அவர்கள் கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் நமக்குத் தேவையான டி.எம்.சி நீர் கிடைக்காமல் போய்விடுமா?

மீண்டும் டி.எம்.சி அரசியல்..? இவ்வளவு நீரை எதற்காக வெளியேற்றுகிறது கர்நாடக அரசு?

மேட்டூர் அணை அதன் மொத்த கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன்பொருட்டு காவிரி இப்போது பிரவாகம் எடுக்கும் இடங்களிலெல்லாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். நீர்ப் பாய்ச்சலின் அருகே நின்று செல்ஃபி எடுக்கிறார்கள், தடையை மீறி படகு சேவை சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து நீந்துகிறார்கள். இந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ, செய்திகளாக வாசிக்கும்போதோ நம் முகமும், உள்ளமும் பூரிக்கிறது. தமிழக மக்களின் இந்த அதீத ஆர்வத்தை உணர்வுரீதியாகவே புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய விவசாய நிலங்கள் வரண்டுபோய் ஓடு ஓடாக பிளந்து இருந்த சமயங்களில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வராததன் பாதிப்பை உணர்த்துவதற்கு பல போராட்டங்கள் நடத்தினோம்.

'எங்களுக்கே போதிய நீர் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை' என்றார் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா. தொடர்ந்து போராடினார்கள் தமிழக விவசாயிகள். காவிரிநீரின் பாசனத்தை நம்பி இருக்கும் மாநிலங்களில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது எனத் தெரிந்தும் கள்ள மௌனம் காத்தது கர்நாடக அரசு. 

ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒருவழியாக அவர்கள் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள். ஆனால், நம் தேவையை மீறி ஒரே மாதத்தில் அளவுக்கு மீறிய டி.எம்.சி தண்ணீரை அவர்கள் திறந்துவிட வேண்டிய அவசியம்தான் என்ன. 

காவிரி விவசாயிகள்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கர்நாடகம், எந்தெந்த மாதம் எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. அதன்படி.. 

ஜூன் மாதம் 10 டி.எம்.சி 

ஜூலை 34 டி.எம்.சி 

ஆகஸ்ட் 50 டி.எம்.சி 

செப்டம்பர் 40 டி.எம்.சி 

அக்டோபர் 22 டி.எம்.சி 

நவம்பர் 15 டி.எம்.சி 

டிசம்பர் 8 டி.எம்.சி 

ஜனவரி 3 டி.எம்.சி 

இந்த மாதம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அளவு 34 டி.எம்.சி. ஆனால், மேலே குறிப்பிட்டது போல மேட்டூர் அணை அதன் மொத்த கொள்ளளவான 93.47 டி.எம்.சியை இந்த மாதம் எட்டியிருக்கும் செய்தி ஒருவகையில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. 

குறிப்பட்ட மாதத்தில் நம் தேவைக்கு அதிகமாக அவர்கள் கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் நமக்குத் தேவையான டி.எம்.சி நீர் கிடைக்காமல் போய்விடுமா? அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் வழங்கித்தான் ஆக வேண்டும். அதற்கான சட்டப் பாதுகாப்பும் இருக்கும் என்கிற பட்சத்தில் அதையெல்லாம் மதிக்கிற மரபு கர்நாடக அரசுக்கு இருக்கிறதா என்பது குறித்த சந்தேகங்களைக் கடந்த காலங்கள் நினைவுப்படுத்துகின்றன. 

ஓர் ஆண்டுக்குக் குறிப்பிட்ட காலங்களில் படிப்படியாக நமக்குக் கிடைக்க வேண்டிய நீரை, தங்களுக்குத் தேவைப்படாத நேரத்தில் மொத்தமாகத் திறந்துவிட்டு பின்னாட்களில் கர்நாடகம் கையைவிரித்தால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கடந்த ஏப்ரல், மே மாதங்களில், மாதம் 2.5 டி.எம்.சி வீதம் நமக்கு 5 டி. எம் சி தண்ணீர் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்ததோ 1 டி.எம். சி தண்ணீர். இதைப் போல அடுத்தடுத்த மாதங்களில் நடந்து கொள்ள மாட்டார்கள் என என்ன நிச்சயம். மேட்டூர் நிரம்பிவழிவதை ஒரு மகிழ்ச்சியான செய்தியாக மட்டும் கடந்து போகாமல் தற்போது வெளியேறிவரும் நீரை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் நிலத்தில் பாய்கிற நீரை நீண்டகாலம் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்கு தடுப்பணைகளும், கதவணைகளும் தேவையான இடங்களில் தமிழக அரசு விரைவில் கட்டியெழுப்ப வேண்டும். இயற்கை பூமியில் பொழிகிற நீரை எப்படி மேலாண்மை செய்து பயன்படுத்த வேண்டுமென நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கல்வெட்டுகளில் செதுக்கியவர்கள் நம் மூதாதையர்கள். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு இது. அந்த மூத்தோர்களின் வாரிசான நாம் இன்னும் எவ்வளவு நாட்கள் நீருக்காக கையேந்தப் போகிறோம். 


டிரெண்டிங் @ விகடன்