வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (24/07/2018)

கடைசி தொடர்பு:12:15 (24/07/2018)

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு ரயில்

கிறிஸ்துவர்களின் புனிதத்தலமான வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்கு நேரடி ரயில் வசதி கிடையாது. அதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனால் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ``தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி சென்று வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலின் திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. 

அதனால் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு திருவிழா கால சிறப்புரயில் அறிவித்து இரு மார்க்கங்களிலும் தென்மாவட்ட பயணிகளுக்குப் பயன்படும் வகையில் காலஅட்டவணை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட்டால் குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

வேளாங்கண்ணி கோயில்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருவிழா ரயில் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. அத்தகைய கடைசி நேர அறிவிப்பால் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் காலியாக இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிப்பதே அந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்க முக்கியத்துவம் கிடைக்காமல் செய்யவே என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், இந்த ரயில்களை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.

மும்பையைத் தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்கள் மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில்களை கடந்த வாரம் அறிவித்துள்ளது. ஆனால், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை அறிவிக்காமல் இன்னமும் தூங்கி வழிகிறது. அதனால் விரைவில் திருவிழாக் கால ரயில் அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.