வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (24/07/2018)

கடைசி தொடர்பு:12:45 (24/07/2018)

`படிக்கட்டுப் பயணம்; நொடியில் மரணம்' - பெற்றோரை கலங்கடிக்கும் மாணவர்கள்

சென்னை ரயிலில் படியில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போலவே  பேருந்துகளில் படியில் பயணம் செய்வதைத் தடுக்க தடுக்காவிட்டால் உயிர் இழப்புகள் ஏற்படும் என அச்சப்படுகிறார்கள் புதுக்கோட்டை வாசிகள்.
 
பேருந்து படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் எனும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், அருகிலுள்ள கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக, அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, கூட்ட நெரிசலால் படியில் தொங்கியபடி பயணம் செய்தான். அப்போது விஜய் தவறி விழுந்து பலியானான். பேருந்துகளில் பயணம் செய்வது குறித்தும் அதைத் தடுப்பது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அவற்றை அரசும் காவல் துறையும் சரியாகப் பின்பற்றுவதில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என அச்சப்படுகிறார்கள் புதுக்கோட்டைவாசிகள். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து திருச்சி மாநகருக்கு தினமும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் வேலைக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் திருச்சிக்கே வரவேண்டிய சூழல். ஆனால், திருச்சிக்கும் விராலிமலைக்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால் இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால் மக்களும் மாணவர்களும் படியில் பயணம் செய்வது தவிர்க்க முடியவில்லை. 
 
மேலும், விராலிமலையிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு இப்பகுதியில் காலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க