மலைவையாவூர் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை! 

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ளது மலைவையாவூர். இந்த ஊரில் சீத்தாராம சுவாமிகள் என்பவரால் அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவனம் என்ற ஆன்மிகக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் போன்ற அமைப்பைப் பெற்றுள்ள இந்த ஆன்மிகக் கூடம் சர்வ சமய நல்லிணக்கத்தைப் பேணுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில் மதுரவல்லி தாயார், சீனுவாச பெருமாள், பாபா, வள்ளலார், திருமழிசை ஆழ்வார், 18 சித்தர்கள் ஆகியோருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் சின்னபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகான் படேசாயுபு என்ற முஸ்லிம் சித்தர் மற்றும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

அப்துல் கலாம் சிலை


சீனுவாச நிகேசன் ட்ரஸ்ட் தலைவர் குருபரன், ``இது கோயில் இல்லை. சர்வ சமய சமுதாய நல்லிணக்க மண்டபம். மனஅமைதிக்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்தத் தியான மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 13 அடிஉயரத்தில் விநாயகருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், பைரவர் ஆகிய சிலைகளும் உள்ளன. காஞ்சி மகாபெரியவரின் பாதையில் பயணிக்கும் பகவான் ஸ்ரீமத் சீதாராம சுவாமிகள் முயற்சியில் இந்த மண்டபத்தை அமைத்துள்ளோம். ஜாதி, மதம் பார்க்காமல் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறோம். சுற்றுவட்டார மக்களுக்காக மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் தொழுநோயாளிகளுக்கு இலவச ஆடைகள், மாற்றுத்திறனாளிகளுக்குப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்து வருகிறோம்.

அப்துல்கலாம் சிலை, மலைவையாவூர் தியான மண்டபம்

2003-ல் கட்டப்பட்ட இந்த இடம் ஒரு சித்தர் பூமியாக இருந்து வருகிறது. இங்குக் கட்டப்பட்டுள்ள ராமானுஜ யோகாவனம் எனும் தியான மண்டபத்தில் சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. நமது காலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் ஒரு ஒரு கர்ம யோகி. அவரைக் கௌரவிக்கும் வகையில் மதில் சுவரில் அவரது சிலையும் உள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி தியான மண்டபத்துக்குக் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது” என்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!