வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (24/07/2018)

கடைசி தொடர்பு:12:41 (24/07/2018)

` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!'  - சிலை வடித்த ஆச்சர்ய கணவர்

சிலை

மனைவி மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து, தினமும் இரண்டு மணி நேரம் அவரோடு பேசிக் கொண்டிருக்கிறார் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஆசைத்தம்பி. 

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் உள்ள தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் கடந்த மாதம் 27-ம் தேதி தன்னுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு ஒன்றை அனுப்பினார். அதில், மரணமடைந்த அவரது மனைவிக்கு சிலை திறப்பு விழா நடத்த இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மனைவிக்கு சிலையா என்ற ஆச்சர்த்தோடு சிலை திறப்பு விழாவும் நடந்து முடிந்தது. ஆசைத்தம்பியிடம் பேசினோம். `` என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி. என்னுடைய மாமன் மகள்தான் பெரியபிராட்டி அம்மாள். அவருக்கும் எனக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. சொந்த ஊரில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்தோம். மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகைக் கடை நடத்தினேன். கேபிள் டி.வி தொடங்கவும் அவர்தான் ஆலோசனை கூறினார். உடனே அந்தத் தொழிலிலும் ஈடுபட்டேன். கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது. திடீரென ஒருநாள் பெரியபிராட்டி அம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு எனத் தெரியவந்தது. மொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போய்விட்டோம். 

அந்த நிலையிலும், ' நான் உங்களுடன்தான் இருப்பேன்' எனத் தைரியம் கொடுத்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். அதற்கு சில நாள்கள் முன்னதாக, ' உனக்கு சிலை வைக்கப்போகிறேன்' என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். பெரிய பிராட்டி அம்மாள் இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, சிலைக்கான கல்லைத் தேர்வு செய்தோம். அவரும் சிலையை வடித்துக் கொடுத்தார். 5 அடி, ஓர் அங்குல உயரத்தில் சிலை உருவானது" என்றவர், ``அவர் இறந்த பத்தாவது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடிவத்தில் என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்தபிறகு எனக்குப் பத்து வயது குறைந்ததுபோல உள்ளது" என்றார் உற்சாகத்துடன்.