``கிராமியக் கலைதான் என்னை வாழவைக்கிறது!'' - மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜ் | Story about Madurai based folk dancer Govindaraj

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (24/07/2018)

கடைசி தொடர்பு:14:48 (24/07/2018)

``கிராமியக் கலைதான் என்னை வாழவைக்கிறது!'' - மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜ்

நான் சின்னப்பையன் என்பதால், எனக்கு மூன்று பரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும்தான் சம்பளம். ஆடி முடத்துவிட்டுச் சாப்பிடும்போது மனதும் சேர்ந்து நிறையும்.

``கிராமியக் கலைதான் என்னை வாழவைக்கிறது!'' - மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜ்

``நேர்மையும் நற்பண்பும்தான் கிராமியக் கலைகளை வளர்க்கும்'' என்கிறார் இளம் மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ். மதுரையில் சித்திரைத் திருவிழாவாக இருந்தாலும் சரி, சிட்டி முழுக்க ஊர்வலமாக இருந்தாலும் சரி, அலைகடல் கூட்டத்திலும் உயர்ந்த மனிதராகத் தென்படுவார் மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ். அரசு விழாக்கள் முதல் அடித்தட்டு மக்களின் வீட்டு விழாக்கள் வரை கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியை நடத்துபவர். பள்ளியில் படிக்கும்போதே கிராமியக் கலையை முறையாகக் கற்றுக்கொண்ட இவர், தற்போது இளம் தலைமுறையினருக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கற்பித்துவருகிறார்.

`கிராமியக் கலையில் வறுமை மட்டுமே மிஞ்சும்' என்று சொல்லும் பலருக்கு நடுவில், ``என்னைக் கிராமியக் கலைதான் வாழவைக்கிறது'' என்று உற்சாகத்துடன்  கலையை வளர்த்துவருகிறார்.

கிராமியக் கலை

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்துவரும் கிராமிய நடனக்கலைஞர் கோவிந்தராஜை நேரில் சந்திக்கச் சென்றோம். தான் வாங்கிய பதக்கங்களாலும் கேடயங்களாலும் வீட்டை அழகுபடுத்தியுள்ளார். அவர் வாங்கிய சான்றிதழ்களை எண்ணிப்பார்த்தால்,  தலைசுற்றிவிடும்! நினைவுப்பரிசுகளுக்கு மத்தியில் பேச ஆரம்பித்தார் கோவிந்தராஜ். ``மரக்கால் ஆட்டம், கொக்கிலி ஆட்டம் என்று சொல்லக்கூடிய இந்த ஆட்டம்தான் எனக்கு நாட்டுப்புறக் கலைகளில் மிகவும் பிடித்தது. நான் ஆறாவது படிக்கும்போதே மரக்கால் ஆட்டத்தைக் கற்க ஆரம்பித்தேன். தற்போது எனக்கு 26 வயசு. இந்த மரக்கால் ஆட்டத்தை, உலக நாடுகளில் ஆடிவருகிறேன்.

என் குடும்பத்தில் யாரும் கிராமியக் கலைஞர்கள் இல்லை. இருந்தாலும் எனக்கு சிறுவயதிலேயே ஏற்பட்ட ஆர்வத்தால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பள்ளி நண்பன் பழனியும் நானும் மதுரை சேதுபதி பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை சார்பாக ஜவஹர் சிறுவர் மன்றத்தின் மூலம் நடத்தப்பட்ட கலைப்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். சனி, ஞாயிறுகள் எங்களுக்கு அங்கேயே கடந்தன. அப்போதுதான் எனக்கு ஆசான் கலை நன்மணி மோகன் கிடைத்தார். என் கலை வாழ்க்கைக்கு அச்சாரமிட்டு, ஒரு கலைஞன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும், நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும், மூத்த கலைஞர்களை மதிக்க வேண்டும் என ஒழுக்கங்களைக் கற்றுத்தந்தவர். அப்போதுதான் மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டாம் என எல்லா கலைகளையும் கற்றுக்கொண்டேன். மரக்கால் ஆட்டத்தை மட்டும் பிரதானமாகக் கற்றேன். மோகன் ஐயாவோடு 12 கிலோமீட்டர் நடந்தே சென்று கட்டைக்கால் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டேன்.

 

கிராமியக் கலை

கொஞ்சம், கொஞ்சமாக அவரோடு கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்த நான், ஆட்டத்துக்கு ஆள்கள் குறைவாக இருக்கும் சமயத்தில் களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தேன். ஆடுகளத்தைப் பயிற்சிக்களமாக மாற்றி, சிறந்த ஆட்டக்காரனாகவும் பெயரெடுத்தேன். பல வருடம் சம்பளம் இல்லாமல்தான் பணியாற்றினேன். பெரிய ஆட்டக்காரர்கள் இருக்கும்போது எங்களை அழைக்க மாட்டார்கள்.

மதுரை மாரியம்மன் தெப்பத் திருவிழாவின்போது தெப்பத்தை முழுதாகச் சுற்றிவருவோம். நான் சின்னப்பையன் என்பதால், எனக்கு மூன்று பரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும்தான் சம்பளம். ஆடி முடத்துவிட்டுச் சாப்பிடும்போது மனதும் சேர்ந்து நிறையும். வருடங்கள் கடந்தன.

ப்ளஸ் டூ முடித்த பிறகு, வீட்டில் என்னை இரும்பு வாஷர் கம்பெனிக்கு வேலைக்குப் போகச் சொன்னார்கள். எனக்கு பிற வேலைகள் செய்யப் பிடிக்கவில்லை. கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து கலைப் பயணத்தில் முழுமையாகப் பணியாற்றினேன். லெட்சுமி அம்மா கரகத்தைத் தலையில் வைத்தபடி சைக்கிள் ஓட்டுவார். கரகத்தைத் தூக்கித் தலையில் வைத்துவிட்டால் ஆட்டம் அனல்பறக்கும். ஏணி வைத்து ஆடுவதில் சுலோக்சனா அம்மா திறமையானவர். கரகக்கலைச் சக்கரவர்த்தி வேலு ஐயா தீப்பந்தம் வைத்து கரம் ஆடுவார். அப்போது இருந்தே தலைமைப் பண்புகளையும் கற்றுக்கொண்டேன்.

கிராமியக் கலை2010-ல் எனக்கு ஆட்டத்துக்கு 250 ரூபாய் சம்பளம். இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டே விடுமுறை நாளில் ஆட்டத்துக்குச் செல்லவேண்டும். புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் ஐயா குழுவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதத்தில் 20 நாள்கூட ஆட்டம் இருந்தது.  ஏழு வருடத்தில் பன்முகக் கலைஞனாக வெளியே தெரிய ஆரம்பித்தேன். அனுபவம், தொடர்புகள் என்று பலவும் கிடைத்து கலைத் துறையில் நல்ல நிலைக்கு வந்தேன்.

பெரும்குழுவை உருவாக்கி 50-க்கும் மேற்றபட்ட கலைஞர்களை வைத்து தற்போது நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். வறுமை இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில் நம்மை மேம்படுத்தும் என்று உணர்ந்தேன். பெரிய கலைஞர்களை மதிப்பது, கலையில் உள்ள சிறப்பம்சங்களை  மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து வருகிறேன்.

இந்தக் கலைதான் என்னை விஜய் டிவி-யில் மிளிரவைத்தது. அதில் என்னையும் என் குழுவையும் பங்கெடுக்கவைத்து கெளரவப்படுத்தியது, நாட்டுப்புறக் கலைக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன்.

2016-ல் மலேசியாவில் நடைபெற்ற உலகக் கலாசார விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வான 10 நபர்களில் நானும் ஒருவன். கடந்த தமிழ்ப் புத்தாண்டில் இத்தோனேஷியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி என்னுடைய கலைப்பயணம் தொடர்கிறது.

தற்போது ஆய்வுப் படிப்புகளில் இறங்கியுள்ளேன். நாட்டுப்புறக் கலையை நம்பி வந்தவர்களுக்குத் தோல்வி கிடையாது. ஒழுக்கமும் நேர்மையும் அவனை உயர்த்தும். கலைஞனுக்குக் கல்விதான் எல்லாவற்றையும் போதிக்கும். மத்திய - மாநில அரசுகள், கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரங்களை தொடரந்து வழங்கவேண்டும். நான் கற்ற கிராமியக் கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த, பெரும் கலைக்கூடம் தொடங்கி கலையைக் கற்பிப்பதே என் வாழ்நாள் லட்சியம்'' என்றபோது அவரின் கண்கள் லட்சியக் கனவில் ஆழ்ந்தன.


டிரெண்டிங் @ விகடன்