`முதலில் எதிர்ப்பார்கள்; அடுத்து புகழ்வார்கள்' - எட்டு வழிச்சாலை குறித்து நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams opposition parties

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:15 (24/07/2018)

`முதலில் எதிர்ப்பார்கள்; அடுத்து புகழ்வார்கள்' - எட்டு வழிச்சாலை குறித்து நயினார் நாகேந்திரன்

``தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சிகள் எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறார்கள். நீங்கள் அரசியல் செய்வதற்காக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைத் தட்டிப்பறிக்காதீர்கள். இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் நாளை இத்திட்டத்தை பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள்" எனப் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

நயினார் நாகேந்திரன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ``பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து மாநில மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறுகிறது. வரும் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மிகப்பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து, சேலம் எட்டு வழிச் சாலை பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "எட்டு வழிச்சாலை நாட்டின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பல தடைகள் வருகின்றன. இதற்கு அரசியல்வாதிகள்தான் முக்கிய காரணம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தங்க நாற்கர சாலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது எதிர்த்த அரசியல் கட்சிகள் தற்பொழுது இந்தத் திட்டத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல எட்டு சாலை எதிர்ப்பவர்கள் நாளை இத்திட்டத்தைப் பற்றி மெய்சிலிர்த்துப் பேசும் காலம் வரும். ஜெயங்கொண்டம் பகுதியில் தொடங்கப்பட உள்ள நிலக்கரித் திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இத்திட்டத்தை நெய்வேலி அனல்மின் திட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க போட்டியிடுமா என்ற கேள்விக்கு, "அகில இந்திய தலைவர் கூறியதுபோல கூட்டணிக்கு நாங்கள் தயார். கூட்டணிக்கு யார் வருகிறார்களோ அவர்களுடன் வலுவான உறுதியான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தற்போது ஒரு பாராளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளோம். வரும் காலகட்டத்தில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம். தமிழகத்தில் மாற்று சக்தியாக மாறப்போகிறது பா.ஜ.க" என உறுதியுடன் கூறினார்.