வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:30 (24/07/2018)

செத்து மிதந்த மீன்கள்... கழிவுநீர் காரணமா? - கோவை வாலாங்குளம் அதிர்ச்சி

கோவை, வாலாங்குளத்தில் கழிவு நீர் கலப்பதன் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.

மீன்கள்

கோவை, ராமநாதபுரம் அருகே, சுங்கம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான வாலாங்குளம் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் குளத்தில் அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்தக் குளத்தில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வாலாங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. காற்றின் காரணமாக, அந்த மீன்கள் கரை ஒதுங்கின. இதைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மீன்கள் இறந்தத் தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வாலாங்குளத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கழிவு நீர் நேரடியாகக் குளத்தில் கலப்பதன் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. "வாலாங்குளத்தில், செயற்கையான ஹைப்ரிட் மீன்கள்தான் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு, பருவநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், கழிவுநீர் நேரடியாகக் கலக்கப்படுகிறது. இவை, இரண்டுமே மீன்கள் இறப்பதற்குக் காரணம்" என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இதனிடையே, மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், குளத்தின் நீரைப் பரிசோதனைக்கு அனுப்ப இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.