`மாடு கட்டுவதற்குக்கூட தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிகள்' - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி! | dr.krishnasamy gives 6 months time to government to fulfill his demands

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (24/07/2018)

`மாடு கட்டுவதற்குக்கூட தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிகள்' - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, ``எஸ்.சி எனப்படும் பட்டியல் பிரிவில் 6 வகையான பெயர்களில் தனித்தனியாக உள்ள பள்ளர், குடும்பர், மூப்பன், காலாடி, வாய்க்காரர், பன்னாடி ஆகியோரை ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும். அத்துடன், தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாகத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அதனால் இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளோம். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம். 

தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவதால் எந்த விதமான நிதிச் செலவும் ஏற்படப்போவதில்லை. அதனால், தேவேந்திரகுல வேளாளர்கள் என அரசாணை வெளியிட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களைத் தவறாகப் பட்டியல் பிரிவில் சேர்த்துவிட்டார்கள். அப்படி சேர்க்கப்பட்டதால் நன்மையைவிட தீமையே அதிகம்.

அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் அதிகமான அளவில் தவறுகள் நடைபெறுகின்றன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தவறுகள் நடப்பதில் முதலிடம் வகிக்கிறது. பல்கலைக்கழக உயர் பதவியில் இருப்பவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் வளர்ச்சியில் கல்வி அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனால் கல்வித்துறையில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். யூ.ஜி.சி சிறந்த அமைப்பாகச் செயல்படுகிறது. அதை மாற்றும் முடிவை மத்திய அரசு கல்வியாளர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் மாடு கட்டுவதற்குக் கூட தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நீட் தேர்வை எந்த அரசு கொண்டு வந்தாலும் ஆதரித்து இருப்போம். நீட் தேர்வில் எந்தச் சிக்கலும் கிடையாது. தமிழக பாடத்திட்டத்தில்தான் கோளாறு இருந்தது. இது குறித்து நான் முன்னெடுத்த பிரசாரத்தின் அடிப்படையில் தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.