வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:05 (24/07/2018)

`நீர்நிலைகளில் செல்ஃபி எடுக்காதீர்கள்' - பொதுமக்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை!

காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமுள்ள அபாயகரமான இடங்களிலும் செல்ஃபி எடுப்பது குளிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை எச்சரித்துள்ளார். 

செல்ஃபி

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கணமழை காரணமாக அங்குள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதனை தவிர்க்க அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டதால், தற்பொழுது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுமையாக திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து கல்லணைக்கு வந்து சேரும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் வழியாக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு திறந்துவிடப்படுகிறது. 

இதற்கிடையே, அதிகமான வேகத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருப்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் செல்ஃபி எடுத்தல், மீன்பிடித்தல், குளித்தல், மாடுகளை குளுப்பாட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை எச்சரித்துள்ளார். காவிரி கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நீர்நிலைகளின் வழியாக நடந்து செல்லுதல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல் போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும்” என ஆட்சியர் அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.