வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:50 (24/07/2018)

`கோரிக்கைகளை ஏற்காவிடில் இனி ரெய்டு கிடையாது' - வருமான வரித்துறையினர் அதிரடி!

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடப் போவதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.

வருமான வரித்துறை

பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறும் போது ``காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்கப்படாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட எங்கள் 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அதிகாரிகளும், ஊழியர்களும் வருமான வரித்துறை சோதனைகளுக்குச் செல்லமாட்டோம். ஆகஸ்ட் 9-ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத்திலும், அதே போல செப்டம்பர் மாதம் 12-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். அதே போல வருமான வரித்துறை நாளான இன்றைய தினத்தைப் புறக்கணித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்" என அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.