வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (24/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (24/07/2018)

காவிரி துலாக்கட்டத்தில் உயிர்ப்பலி தடுக்கப்படுமா?

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், கடந்த ஆண்டில் நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவுக்காக ஆற்றின் நடுவே      நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.   அது, பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், பொதுமக்களை உயிர்ப்பலிவாங்கும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  

காவிரி துலாக்கட்டம்

கல்லணை திறக்கப்பட்டு, காவிரியில் கரைபுரண்டுவரும் தண்ணீரை கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், நந்தி தேவர் நீராடி தனது பாவத்தைப் போக்கிக்கொண்டதால், இது ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.  கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புனித நதிகளெல்லாம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் காவிரி துலாக்கட்டத்தில் வந்து நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாகவும் ஐதீகம்.  

இத்தகைய சிறப்புமிக்க துலாக்கட்ட காவிரியின் நடுவே, 100 அடி நீளமும் 17 அடி அகலமும் கொண்ட நீர்தேக்கத் தொட்டி ஒன்றை புஷ்கர விழாவுக்காக அமைத்தார்கள். அப்போதே சுமார் 10 அடி ஆழமுள்ள இந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆற்றில் இருப்பது தெரியாமல் நீராடச் சென்ற சிலரைப் பலிவாங்கியிருக்கிறது.  தற்போது கல்லணை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்.  இல்லையெனில், நீருக்கு அடியில் ஆழமான தொட்டி இருப்பது தெரியாமல் பல உயிர்கள் பலியாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்த விஷயத்தில் அரசு உடனே அக்கறை செலுத்துமா?