தஞ்சை மாவட்ட மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிப்பு! | 7 fishermen of Tanjore district were arrested by the Sri Lankan Navy

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:52 (24/07/2018)

தஞ்சை மாவட்ட மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிப்பு!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைப் பிடித்துச் சென்றனர். 

மீனவர்கள்


புதுக்கோட்டை மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த செய்புல்லா என்பவரது படகில் நாராயணன், சக்திதாஸ், ஆயுள்பதி, கண்ணதாசன் ஆகியோர் நேற்று கள்ளிவயல் தோட்டம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதே போல் அப்துல்வகாப் என்பவருக்குச் சொந்தமான படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இரு படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் சுற்றி வளைத்துச் சிறைப்பிடித்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லும் போது ஒரு படகு கடலில் மூழ்கியது. 

இதையடுத்து அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர். அவர்களை மீட்ட இலங்கைக் கடற்படையினர் மற்றொரு படகில் ஏற்றி விசாரணைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். இலங்கைக் கடல் பகுதிக்குள் அத்துமீறும் படகுகளுக்கு லட்சக்கணக்கான  ரூபாய் அபராதமாக விதிப்பதுடன், படகுகளில் செல்லும் மீனவர்களுக்கு 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் இலங்கையில் புதிய சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைப் பிடித்துச் செல்லப்பட்டிருப்பது மல்லிப்பட்டினம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.