வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:16:30 (24/07/2018)

பழங்கால கலைப் பொருள்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அங்கன்வாடி பணியாளர்!

நெல்லையைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் ஒருவர், தனது வீட்டில் இருந்த பழங்காலத்தைச் சேர்ந்த கலைப் பொருள்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

அருங்காட்சியகம் - கலைப் பொருட்கள்

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. பழங்கால கற்சிலைகள், முதுமக்கள் தாழி, பழங்கால மக்கள் பயன்படுத்திய உபகரணங்கள், நாணயங்கள், கலைநயமிக்க பொருள்கள் எனப் பல்வேறு அரிய பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் மாவட்டம் முழுவதிலுமிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் வந்து அவற்றைப் பார்வையிட்டு மகிழ்கிறார்கள். 

அருங்காட்சியகத்தில் 3டி படக்காட்சிகள் காட்டப்படுவதால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கிறார்கள். இங்கு ஓவியப் பயிற்சி, கலைப் பொருள்கள் செய்வதற்கான பயிற்சி, பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவதால் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் அதில் பங்கேற்று பயனடைந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்துக்கு நெல்லையைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மினர்வா தேவி என்பவர் நேரில் வந்து காப்பாளர் சத்தியவள்ளியைச் சந்தித்தார். அப்போது, தன் மூதாதையர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பர்ய கலைப் பொருள்கள் சிலவற்றை அருங்காட்சியகத்தில் அவர் ஒப்படைத்தார். மரத்தால் செய்யப்பட்ட இரு மரப்பாச்சி பொம்மைகள், கல்லால் வடிக்கப்பட்ட பணியார சட்டி, மரத்தால் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அசோகர் தூண், அழகிய அமைப்பில் செதுக்கப்பட்ட ஊதுபத்தி ஸ்டாண்ட் ஆகிய பொருள்களை அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். 

இந்தப் பொருள்கள் தனது வீட்டில் இருப்பதைவிடவும் இங்கு வைக்கப்பட்டால் அனேகர் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன் நமது மூதாதையரின் அரிய படைப்புகளை அனைவரும் பார்த்து மகிழும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்ததாக அங்கன்வாடி பணியாளரான மினர்வாதேவி தெரிவித்தார். அவரின் இந்தச் செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

இது பற்றி நெல்லை அருங்காட்சியக் காப்பாளரான சத்தியவள்ளி கூறுகையில், ``நல்ல முன்னுதாரணத்தை மினர்வாதேவி ஏற்படுத்தி இருக்கிறார். அவரது செயல் பாராட்டுக்குரியது. இதுபோல பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள பழங்காலப் பொருள்களை அடுத்த தலைமுறையினர் பார்ப்பதற்கு வசதியாக அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்க முன்வர வேண்டும். அந்தப் பொருள்களின் முக்கியத்துவத்தை எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்வதுடன் மூதாதையர்களின் கலை நயத்தைப் புரிந்து கொள்ளவும் அதுவே உதவியாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.