கோயில்களில் விளக்கேற்ற தடை! - கும்பகோணத்தில் சிவனடியார்கள் உண்ணாவிரதம்

கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு, இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட அலுவலகத்தில் சிவனடியார்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்கள்.

கோயில்களில் தீ விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கவும், தூய்மையாகப் பராமரிக்கவும் பக்தர்கள் விளக்கேற்றுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன் கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதற்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிகாரிகள் தங்கள் விருப்பம்போல முடிவெடுக்கக் கூடாது; இது, மக்களின் வழிப்பாட்டு உரிமைக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில்தான் கும்பகோணத்தில் உள்ள ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட அலுவலகத்தில் இன்று சிவனடியார்கள் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்.

சிவனடியார்கள் உண்ணாவிரதம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், ‘’தடையை நீக்க வலியுறுத்தி, கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் அருகில் உண்ணாவிரதம் இருக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தோம். பொது இடங்கள்ல அனுமதிக்க முடியாதுனு காவல்துறையினர் சொல்லிட்டாங்க. அதனால்தான், எங்களோட அலுவகத்துல உண்ணாவிரதம் இருக்கோம். தீ விபத்துகளைத் தவிர்க்கத்தான் இந்தத் தடைனு அதிகாரிகள் சொல்றாங்க. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கு. தட்டுகள்ல வச்சி அகல் விளக்குகள் ஏத்துறதுனால ஆபத்துகள் ஏற்படாது. ஒருவேலை ஏதேனும் ஆபத்துகள் ஏற்படும்னு அச்சப்பட்டா, ஊழியர்களைக் கொண்டு கண்காணிக்கலாம். எப்படி கையாள வேண்டும் என பொதுமக்கள்கிட்ட விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம். தடை விதிக்குறது நியாயமே இல்லை.

விளக்கேற்றுவது ஆன்மிக நம்பிக்கை சார்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக இது வழக்கத்தில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவராகிய கலியநாயனார் கோயில்களில் விளக்கேற்றி தொண்டுசெய்தவர். விளக்கேற்றி வழிபட முடியாத சூழல் வந்தபோது, தனது கழுத்தை அறுத்து ரத்ததால் விளக்கேற்றியதாக பக்தி இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவருக்கு இன்றைய தினம், ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெறுவது வழக்கம்.  அதனால், இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கோம். கலியநாயனார் குருபூஜையின் போது சிவ ஆலயங்களில் பக்தர்களும் சிவனடியார்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள். தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!