வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (24/07/2018)

கடைசி தொடர்பு:17:14 (24/07/2018)

தடுப்புச்சுவரில் உரசிய பை... அடுத்தடுத்து விழுந்த பயணிகள்... பரங்கிமலையில் நடந்தது என்ன?

பரங்கிமலை ரயில் விபத்து நடந்த ஆய்வு செய்யும் காவல்அதிகாரிகள்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், வழக்கமான தண்டவாளத்தைத் தவிர்த்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் தண்டவாளத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடியிருக்கும் பெரும்பாலான மக்கள், மின்சார ரயிலை நம்பித்தான் இருக்கின்றனர். இதனால், காலை மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். சென்னை கடற்கரையிலிருந்தும் சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் பகுதியிலிருந்தும் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

நேற்றிரவு, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி விரைவு மின்சார ரயில் சென்றது. பரங்கிமலை ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயிலின் வாசலில் தொங்கியப்படி சென்ற ஸ்டீபன், விக்னேஷ் ஆகியோர் அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்து இறந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்த விபத்தைத் தொடந்து, இன்று காலையில் அதே இடத்தில் இன்னொரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதில், 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துக்கும் அதே தடுப்பு சுவர்தான் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னை மாம்பலம்- கோடம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே இன்று மின்சாரக் கம்பி அறுந்துவிழுந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ரயில் சேவை தொடங்கியதும் அனைத்து ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதின. 

பரங்கிமலை ரயில் விபத்து

ரயில்பெட்டியின் வாசலில் தொங்கியபடி ஏராளமானவர்கள் பயணித்தனர். சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் வரை செல்லும்  மின்சார ரயில், இன்று காலை 8.45 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தது. ரயிலில் தொங்கியபடி பயணித்த சிலர், தடுப்புசுவரில் மோதி அடுத்தடுத்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே மூன்று பேரும், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் ஒருவரும் என 4 பேர் பலியாகினர். இவர்களில் மூன்று பேரின் விவரம் மட்டும் தெரியவந்துள்ளது. இன்னொருவர் குறித்து விசாரித்துவருகிறோம்" என்றார். 

விபத்துக்கு முக்கியக் காரணமாக தடுப்புச்சுவரை சொல்கின்றனர் பயணிகள். சென்னை பீச் டு திருமால்பூர் வரை சென்ற மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பிளாட்பாரம் வழியாக சென்றது. அப்போதுதான் தடுப்புச்சுவரில் ஒரு பயணியின் பை உரசியுள்ளது. அந்தப் பயணி நிலைதடுமாறி கீழே விழ, அடுத்தடுத்து சில பயணிகள் தண்டவாளத்தில் விழுந்துள்ளனர். இதில் மூன்று பேர் ரயிலில் சிக்கி கொடூரமாகப் பலியாகியுள்ளனர். உடனடியாக ரயில் நிறுத்தப்படாததால், கீழே விழுந்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்துக்குக் காரணமான தடுப்புச் சுவரை அகற்றுவதுகுறித்து ரயில்வே அதிகாரிகளும் போலீஸாரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். நேற்றிரவு 2 பேர் இன்று காலை 4 பேர் என ஆறு பேரை பலிவாங்கிய தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பலியான மாணவர்கள் 

ரயில் விபத்தில் பலியான சிவக்குமார், பல்லாவரத்தில் உள்ள கல்லூரில் படித்துவந்தார். கல்லூரிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். இன்னொருவர் பரத். இவர், தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார்.  மற்றொருவர் பெயர் பிரவீன்குமார் என்று தெரியவந்துள்ளது. அவர்குறித்த முழுவிவரம் தெரியவில்லை