வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (24/07/2018)

கடைசி தொடர்பு:15:37 (24/07/2018)

லாரி ஸ்ட்ரைக் - காய்கறிகள் விலை உயர்வு அபாய அலாரம்! #LorryStrike

முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகள் முழுவதுமாக அழுகத் தொடங்கி உள்ளன. காய்கறிகளை ஓரிரு நாள்கள் வரைதான் பாதுகாத்து வைக்க முடியும் என்பதோடு, அவற்றைப் பாதுகாக்க ஆகும் செலவும் அதிகம் என்பதால் மொத்த வியாபாரிகள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

லாரி ஸ்ட்ரைக் - காய்கறிகள் விலை உயர்வு அபாய அலாரம்! #LorryStrike

மிழகம் உட்பட தென் மாநிலங்களில் தொடங்கியுள்ள லாரி ஸ்டிரைக் நான்கு நாள்களாகத்  தொடர்ந்து நீடிப்பதால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகளின் மொத்த விலையை நிர்ணயம் செய்யும் சென்னை மற்றும் புறநகர் காய்கறி மார்க்கெட்டுகளிலிருந்து காய்கறிகளை வாங்கி சந்தைப்படுத்த முடியாததால் பெருமளவிலான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட  பொருள்கள் தேக்கமடைந்துள்ளன. தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகள் முழுவதுமாக அழுகத் தொடங்கி உள்ளன. காய்கறிகளை ஓரிரு நாள்கள் வரைதான் பாதுகாத்து வைக்க முடியும் என்பதோடு, அவற்றைப் பாதுகாக்க ஆகும் செலவும் அதிகம் என்பதால் மொத்த வியாபாரிகள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்நோக்கி வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

லாரி ஸ்ட்ரைக்

லாரி ஸ்டிரைக் காரணமாக, தமிழகத்தில் கடந்த நான்கு நாள்களில் மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் ஜவ்வரிசி, மஞ்சள், புளி, எண்ணெய் பேரல்கள் மட்டுமல்லாமல் கைத்தறி ஜவுளிகள், இரும்புக் கம்பிகள், செங்கல், மணல், சிமென்ட் மூட்டைகள் உள்ளிட்டவையும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் தேங்கிக் காணப்படுவதால் அவற்றை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்கு மிக அதிகளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, வெளி மாநிலங்களிலிருந்து வந்த லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், அவற்றில் கொண்டுவரப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களும், அவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. லாரி ஸ்டிரைக்கால் சேலம் மாவட்டம் மிகப்பெரிய அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அங்குள்ள வியாபாரிகள். கோழிகளுக்குத் தேவையான தீவன மூலப்பொருள்கள், வடமாநிலங்களிலிருந்துதான் வருகிறது என்பதால், கோழிகளுக்குத் தீவனம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடக்கும் ஈரோடு மாவட்டத்தில், ரூ. 10 கோடி மதிப்பிலான மஞ்சள், ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளி பண்டல்களும் தேங்கிக் காணப்படுகின்றன. 

லாரி

தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம், புதுவைக்குத் தினமும் 200 டன் அளவிலான காய்கறிகள் கொண்டுசெல்லப்படுவதும் லாரி ஸ்டிரைக்கால் தடைபட்டுள்ளது. திருச்சிக்குக் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தேனி, கம்பம், ஓசூர், நாமக்கல், போடி உள்ளிட்ட இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் ஒட்டுமொத்தக் காய்கறிவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி கம்பெனிகளிலிருந்து லாரிகளில் அனுப்பப்பட வேண்டிய சரக்குகளும் தேங்கியுள்ளன. பட்டாசு ஆலைகளுக்கு மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் எதிரொலியால் மதுரையில் ரூ.200 கோடி அளவுக்கும், தூத்துக்குடியில் ரூ.100 கோடி அளவுக்கும் வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

நீடிக்கும் லாரி ஸ்டிரைக் குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார், ``ஸ்டிரைக் ஏன் நடக்கிறது என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அரசு நினைத்திருந்தால் ஸ்டிரைக்கை ஆரம்ப நிலையிலேயே தடுத்திருக்க முடியும். எப்போதோ காலாவதியாகிப் போன ஏழு சுங்கச்சாவடிகள் சென்னையில் இப்போதும், லாரி ஓட்டுநர்களிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. `நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றிவிட்டு, சுங்கக் கட்டணமாக, ஆண்டுக்கு ஒருமுறை ரூ.18 ஆயிரம் கோடியை அரசு பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மேற்கொள்வதுடன், அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' ஆகிய மூன்று பிரதானக் கோரிக்கைகளைத்தாம் நாங்கள் வைத்துள்ளோம். அதிக விபத்துகளை ஏற்படுத்துகிற பஸ், கார், டூ-வீலர் போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாமல், லாரிகளை மட்டும் குறிவைத்து கொண்டு வரப்பட்டிருக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வு 6 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற உயர்வாகும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியே வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளோம். கோவையிலிருந்து கேரளாவுக்கு லாரியில்போன ஓட்டுநர் ஒருவர், எல்லையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கோரியுள்ளோம். லாரிகள் வேலைநிறுத்தம் எழுபது சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. நல்ல முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்