வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (24/07/2018)

கடைசி தொடர்பு:16:50 (24/07/2018)

சொத்துவரி 100% உயர்வு! ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரியை எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு திடீரென்று உயர்த்தியுள்ளது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சியில் இந்த அறிவிப்பு மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்க வேண்டிய 3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னும் பெறப்படாமல் இருக்கிறது.

மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளைப் பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களைத் துயரத்தில் அ.தி.மு.க அரசு ஆழ்த்தியுள்ளது. எனவே, இந்தச் சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் இந்த வரி உயர்வை திரும்பப் பெறக் கோரியும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வருகின்ற 27.7.2018 அன்று காலை தி.மு.க-வினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து தி.மு.க-வினரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க