வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (24/07/2018)

கடைசி தொடர்பு:17:10 (24/07/2018)

ஆசிரியராகத் தகுதிபெற இனி போட்டித்தேர்வு எழுத வேண்டும் - அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர போட்டித்தேர்வு நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகத் தகுதி பெறுவதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  தற்போது தகுதி தேர்வு மதிப்பெண்ணுடன் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டு ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறை விரைவில் நீக்கப்படும் என சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கான புதிய நடைமுறையை அரசாணையாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வெயிட்டேஜ் முறை கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு ஒன்று நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இந்தப் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என அரசாணையில் குறிபிடப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல், ஆசிரியராகத் தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வும் ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வும் என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.