''காலையில பார்த்தவன இப்ப பொணம்னு சொல்றாங்க'' - பரங்கிமலை விபத்தில் பலியான பரத்தின் அம்மா கதறல் | mother of bharath who died in the parangimalai train accident

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (24/07/2018)

கடைசி தொடர்பு:18:14 (24/07/2018)

''காலையில பார்த்தவன இப்ப பொணம்னு சொல்றாங்க'' - பரங்கிமலை விபத்தில் பலியான பரத்தின் அம்மா கதறல்

''காலையில பார்த்தவன இப்ப பொணம்னு சொல்றாங்க'' - பரங்கிமலை விபத்தில் பலியான பரத்தின் அம்மா கதறல்

ரு சிறிய அலட்சியம்... 4 உயிர்களைப் பறித்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிமலை அருகே, எக்ஸ்பிரஸ் ரயில் செல்லவேண்டிய தண்டவாளத்தில், மின்சார ரயிலைத் திருப்பிவிட்டதால், கூட்ட நெரிசலால் படிக்கட்டு அருகே பயணம் செய்துகொண்டிருந்தவர்கள், பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி தவறி விழுந்துள்ளனர். அதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். அதில் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் பரத். செய்தி அறிந்ததும் ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்றேன்...

ரயில் விபத்து

``இப்போ எதுக்கு எல்லாரும் இங்கே வந்துருக்கீங்க? என் புள்ள சாகலை. அவனுக்கு உள்ள வைத்தியம்தான் பார்த்துட்டிருக்காங்க. அவன் சாக மாட்டான் என்ன விட்டுப் போகமாட்டான்'' என்கிற பரத் அம்மா, ஜெயலட்சுமியின் கதறல், சுற்றியிருந்தவர்கள் இதயத்தை துளைத்தது.

``அம்மா, போஸ்ட்மார்டம் முடிஞ்சது. பையனின் அப்பா வந்து பாடியை வாங்கிக்கோங்க" எனக் காவல் துறை அலுவலர் சொல்ல, ``யாரை பாடின்னு சொல்றீங்க? அவன் ராசா மாதிரி இருப்பான். அவன் செத்துடான்னு யாரு சொன்னாலும் நம்பமாட்டேன்'' எனத் தலையில் அடித்தவாறு வெடிக்கிறார் ஜெயலட்சுமி. எல்லோரும் தேற்றுகிறார்கள். நீண்ட நேர அழுகைக்குப் பிறகு பேசுகிறார் அந்தத் தாய்.

பரங்கிமலை ரயில்வே சுவர்

``எனக்கு இரண்டு புள்ளைங்கமா. பெரியவன் பரத், சின்னவன் கோபி. பல்லாவாரத்தில் இருக்குற அரசுப் பள்ளிக்கூடத்துல பரத் படிக்கிறான். என் வூட்டுக்காரு பல்லாவரத்தில் முடிவெட்டும் கடை வெச்சுருக்கார். எனக்கு லோ பிரஷர். ரெஸ்டில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. என்னையும் புள்ளைகளையும் என் தம்பி ஆனந்த் பார்த்துக்கிறான். தண்டயார்பேட்டையில் என் தம்பி வூட்லதான் நான் தங்கியிருக்கேன். என் மவன் தினமும் தண்டையார்பேட்டையிலிருந்து பீச் ஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலில் பல்லாவரம் போவான். இன்னைக்குப் போனவன் வரமாட்டானு நினைச்சே பார்க்கலை. `12-ம் கிளாஸ்... நிறைய படிக்கணும். டெய்லி அம்புட்டு தொலைவிலிருந்து வரணுமா கண்ணு?'னு கேட்டதுக்கு, `உனக்காகத்தான் அம்மா. பரவாயில்லேம்மா நான் படிச்சிருவேன்'னு சொன்னான். இப்போ அவனை பொணம்னு சொல்றாங்களே' எனச் சுவரில் முட்டிக்கொண்டு அழுகிறார் ஜெயலட்சுமி.

``அம்மா, நான் இனி அண்ணனோடு சண்டையே போட மாட்டேன். அவனை வரச்சொல்லுமா'' என அழுகிறான் பரத்தின் தம்பி. ``ஐயோ... போலீஸ் ஆகணும்னு சொன்னவன் இப்படிப் பொணமா கெடக்கானே'' எனக் கதறியபடி மயங்கி விழுகிறார் ஜெயலட்சுமி.

அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல்

பரத் அம்மாவிடம் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல்

பரத்தின் மாமா, ``எங்க அக்காகிட்ட எதுவும் கேட்காதீங்க. அதுக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயமா இருக்கு. அக்கா வீட்டு வேலை பார்த்துதான் பசங்கள படிக்கவைக்குது. பரத் ஏழு மணிக்குக் கிளம்பணும்னு அஞ்சு மணிக்கே எழுந்து சமைக்கும். அவன் கேட்கிறதை எல்லாம் வாங்கிக்கொடுக்கும். புள்ளைக்கு ரொம்பச் செல்லம் கொடுக்காதேனு சொன்னால், நாமதான் கஷ்டப்படறோம். அதுங்களாவது சந்தோசமா இருக்கட்டும்'னு சொல்லும். `என் மவன் எம்புட்டு அழகா இருக்கான் பாருடா'னு சொல்லிட்டே இருக்கும். எப்பவும்போல இன்னைக்கும் ஸ்கூலுக்குக் கிளம்பி போனா பரத். நான் வீட்டில் டிவி பார்த்துட்டிருந்தேன். பல்லாவரம் பக்கத்துல ரயிலிலிருந்து தவறி விழுந்துட்டதா நியூஸ் ஓடுது. பரத்தும் இந்நேரத்துக்கு அங்கேதானே போயிட்டிருப்பான்னு நினைச்சதும் பகீர்னு ஆகிடுச்சு. அவன் பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிக் கேட்டபோது, அவன் இன்னும் வரலைன்னு சொல்லிட்டாங்க. டிவியில் கொடுத்திருந்த ஒரு நம்பருக்கு போன் பண்ணி கேட்டதுக்கு, `விழுந்தவங்களில் பரத்துன்னு ஒரு பையன் இருக்கான். நேரில் வந்து அடையாளம் சொல்லுங்க'னு சொல்லிட்டாங்க. 

வேலைக்குப் போயிட்ட அக்காவையும் கூட்டிட்டு ராயப்பேட்டைக்கு வந்தேன். போலீஸ்காரங்க அவனுடைய பொருள்களை காட்டினாங்க. `சாமி என்ன ஆச்சு? அவன் எங்கே?'னு கதறினோம். நேத்துராத்திரி என்கிட்ட வந்து, `மாமா, என் பெல்ட் பழசாயிருச்சு. புதுசு வாங்கிக்கொடுக்கிறியா?'னு கேட்டான். நைட்டு கடைக்குக் கூட்டிட்டுப் போய் வாங்கிக்கொடுத்தேன். இப்படி அடையாளம் காட்டதான் அந்த பெல்ட்டை கேட்டானோ... ரயிலு கூட்டமா இருந்ததாலதான் படியில் தொங்கிட்டுப் போயிருக்காங்க. தடுப்புச்சுவரில் அடிபட்டிருக்கு. ஒருத்தரைக் காப்பாத்த ஒருத்தர் கை கொடுக்க போய், நாலு பேரும் விழுந்துட்டாங்க'' என அழுதவாறு சுவரில் சாய்ந்துகொண்டார்.

பரத்தின் அப்பா அங்கே வர, ``ஐயா... வூட்டுக்காரரு வந்துட்டார். உங்க காலுல வுழறேன் அவன் முகத்தையாவது காண்பீங்க'' எனக் காவலர்களிடம் ஜெயலட்சுமி கதறுகிறார். மார்ச்சுவரிக்குள் அழைத்துச் சென்றனர். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, வெடித்து அழுதுகொண்டே ஓடிவந்து, ``ஐய்யோ... என் புள்ள மூஞ்சியே சிதைஞ்சுப் போச்சே... இதைப் பார்த்துமா சாமி என்னை இன்னும் உசுரோட வெச்சுருக்கு'' எனக் கதறி அழுவது அத்தனை பேரையும் உலுக்கி எடுக்கிறது.

 


டிரெண்டிங் @ விகடன்