இமயமலையில் டிரெக்கிங்... வேட்டை நாயுடன் வாக்கிங்... மாறிவரும் போலீஸ் டிரெய்னிங்!

உலகத்தோட‌ எந்தவித‌த் தொடர்பும் இல்லாம அடர்ந்த மலைக்காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டோம். இரண்டு நாள்கள் சாப்பிடலை.

இமயமலையில் டிரெக்கிங்... வேட்டை நாயுடன் வாக்கிங்... மாறிவரும் போலீஸ் டிரெய்னிங்!

பொதுவாக காவல்துறையின் கடைநிலை வேலைக்கு ஆள் எடுக்கும்போது உடல்வலிமையைச் சோதிக்கும் தகுதித்தேர்வுகள் நடைபெறும். ஐ.பி.எஸ் போன்ற நாட்டின் மிக முக்கியமான காவல்துறை அதிகாரிகளுக்கான டிரெய்னிங் ஹைதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகாடமியில் நடத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மூளைக்கு முதல் இடத்தைக் கொடுப்பதாகவும், உடலுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுப்பதாகவும் பயிற்சி முறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

போலீஸ்

ஆனால், 2008-லிருந்து 2010 வரைக்கும் போலீஸ் அகாடமியின் இயக்குநராகப் பணியில் இருந்தவர் `வீரப்பன் புகழ்’ விஜயகுமார் ஐ.பி.எஸ். பயிற்சி முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவந்தார். உடலுக்கும் மனதுக்கும் சவால் விடும் மலையேற்றம், குதிரையேற்றம், தற்காப்புக்கலைகள், நீச்சல் பயிற்சி இவற்றுடன், இமயமலையில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் கடினமான சூழலில் தங்கி மீண்டு வருதல் (jungle warfare techniques) போன்றவை சேர்க்கப்பட்டன. அதன்பிறகு ரிவர் ராஃப்டிங், பாரா க்ளைடிங், பாரா செய்லிங் போன்றவையும் சேர்க்கப்பட்டன. கட்டாயமில்லை என்றாலும் இந்த ஆண்டு பங்கி ஜம்பிங்கும் (குஷி படத்தில் `மொட்டு ஒன்று' பாடலில் விஜய் குதிப்பாரே..!) பயிற்சியின்போது இளம் ஐ.பி.எஸ்-கள் மேற்கொள்கிறார்கள். உத்தரகாண்டின் ரிஷிகேஷில் மோஹன் சாட்டி என்ற இடத்தில் போலீஸ் பயிற்சி அதிகாரிகள் மலையிலிருந்து அட்ரீனலின் பீறிட குதித்தெழுகிறார்கள்.  

இந்தக் கடினமான டிரெய்னிங் பற்றி திருவள்ளூர் எஸ்.பி-யான சிபி சக்கரவர்த்தி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

சிபி சக்கரவர்த்தி போலீஸ் ஐ.பி.எஸ்

 

``தற்போது பங்கி ஜம்பிங் கட்டாயமில்லைனாலும் சில நிமிடங்களிலேயே நிறைய தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடியதா இருக்குறதால பலர் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள். 25 வயதுக்குள் இருப்பவர்கள் நிச்சயம் மேற்கொள்ளவேண்டியதுதான் அது. விஜயகுமார் சார் டைரக்டராக இருந்தப்போ அவர் பயிற்சியளித்த இரண்டு பேட்ஜ்களில் நானும் ஒருவன். அவர் யோசனையிலும் வழிகாட்டுதலிலும்தான் ராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் மலைப்பிரதேச டிரெக்கிங் அனுபவம் எங்களுக்கும் கிடைத்தது. அந்தத் த்ரில்லிங் அனுபவமே பத்து பங்கி ஜம்பிங் அனுபவத்தைத் தரும் என்பது நிஜம்.

எங்களோட டிரெய்னிங்ல ஒரு பகுதியா ரஃப் டிரெக்கிங்கும் அப்போ சேர்க்கப்பட்டிருந்தது. சாதாரணமான டிரெக்கிங் இல்லை அது. கரடுமுரடான இமயமலை டிரெக்கிங். கற்பனைக்கு அப்பாற்பட்ட ரொம்பவே உயரமான வழுக்குப்பாறைகள், பேர்தெரியாத அடர்ந்த காட்டு மரங்கள்னு ரொம்ப சுவாரஸ்யமான டிரெக்கிங் பயணம் அது! பொதுவா நாங்க டீம் டீமா பிரிஞ்சு டிரெக்கிங் போறது வழக்கம். நானும் என்னோட பேட்ஜ் மேட்ஸ் 5 பேரும் அப்படி ஒரு டிரெக்கிங் பயணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.  பயண‌ சுவாரஸ்யத்துல ரொம்ப தூரம் பாதை தவறிப் போயிட்டோம். நல்லா இருட்டிருச்சு.

உலகத்தோட‌ எந்தவித‌த் தொடர்பும் இல்லாம அடர்ந்த மலைக்காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டோம். இரண்டு நாள்கள் சாப்பிடலை. பயங்கரமான விஷப்பூச்சிகள், பாம்புகள், விலங்குகள் வாழுற காடு அது. `பூட்டியா'ங்கிற நாய் அந்தக் காட்டோட ஸ்பெஷலிஸ்ட்! வேட்டை நாய் வ‌கையைச் சேர்ந்தது. காடு பூரா நிறைய உலாத்தும். அதுகிட்ட மாட்டுனோம்னா அவ்ளோதான். அப்படியே உட்கார்ந்துட வேண்டியதுதான். விடியவிடிய நீங்க உட்கார்ந்தாலும் அதுவும் சமத்தா பக்கத்துல உட்கார்ந்து உங்களை வாட்ச் பண்ண ஆரம்பிச்சிரும். எந்திரிச்சு ஓடுனா அவ்ளோதான் அது விரட்டிக் கடிச்சுக் குதறிடும். அப்படிப்பட்ட காட்டுக்குள்ள நாங்க மாட்டிக்கிட்டோம். இருட்டின பிறகு அந்த பிராந்தியமே பயங்கரமா இருந்துச்சு. விதவிதமான விலங்குகளின் சத்தம் வண்டுகளின் ரீங்காரம் எவ்ளோ தைரியமான ஆளையும் அசைச்சுப்பார்த்திடும்.

போலீஸ்

எங்ககிட்ட இருந்த வாக்கி டாக்கியால ஒரு பிரயோஜனமும் இல்லை. நாங்க டவர் ரீச் ஆகாத அடர்ந்த காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு தவிக்கிறது மத்தவங்களுக்குத் தெரியுமானே தெரியலை. நானும் என் நண்பர்களும் எப்படியாச்சும் இந்தக் காட்டுக்குள்ள இருந்து தப்பிச்சுப் போயிடணும்னு முடிவெடுத்து மலைச்சரிவுகள்ல ஒரு திட்டத்தோட நடக்க ஆரம்பிச்சோம். கவனம் பிசகினாலும் பல ஆயிரம் அடி பள்ளத்துல விழவேண்டிய சூழல் வேற... அப்போதான் கடுமையான மழை பெய்ய ஆரம்பிச்சது. அதுவும் சாதாரண மழை இல்லை. ஐஸ் கட்டி மழை. `சொட்டீர் சொட்டீர்'னு அது எங்க உடம்புல விழுறது ஒரு வலின்னா ரத்தத்தையே உறைய வைக்கிற குளிர் கூடுதல் அவஸ்தையைத் தருது.

சான்ஸே இல்லை... எங்களோட ட்ரெஸ், ஷூஸ் பேக் எல்லாம் நனைஞ்சு கூடுதல் வெயிட் கொடுத்து உடம்பே அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிடுச்சு. சொதசொதன்னு ஓடுற காட்டாற்று வெள்ளத்தையும் தாண்டி அந்த மலைப்பிரதேசத்துல மாட்டிக்கிட்டு எப்படித் தப்பிக்கிறதுனு நாங்க‌ யோசிச்சு நடந்துக்கிட்டு இருந்த கணம் `Misfortunes never come single' னு சொல்றமாதிரி எங்களோட கால் பாதங்கள்வேற குளிர்ல உறைஞ்சு அப்படியே மறத்துப்போயிடுச்சு. ஒவ்வொரு அடி எடுத்துவைக்கவே ரொம்பவே சிரமப்பட்டோம். கலோரிகள் பூரா வேஸ்ட் ஆனதால‌ துவண்டுட்டோம். இனி எதிரில் புலியே வந்தாலும் `ஹாய்' சொல்லக்கூட சக்தியில்லை. `போச்சு.. அவ்ளோதான். இன்னிக்கு ஏதோ ஒரு விலங்குக்கு நாம டின்னர் ஆகப்போறோம்டா'னு நினைச்சேன். மனசுக்குள்ள டிஸ்கவரி சேனல் `மேன் வெர்ஷஸ் ஒயில்ட் (man vs wild)' ஷோதான் ஞாபகத்துக்கு வருது.

இருக்குற சக்தியல்லாம் ஒண்ணா திரட்டி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அந்த அடர்ந்த மலைக்காட்டுக்குள்ள நாங்க கைகளைப் பயன்படுத்தியும் விலங்குகள் போல நடக்க ஆரம்பிச்சோம். இப்படி நான்கு கால்களால் நடக்க ஆரம்பிச்சதும்தான் கொஞ்சம் எனர்ஜடிக்கா இருந்தது. நாலைஞ்சு கிலோமீட்டர் அப்படி நடந்ததும் ஓர் உயரமான சரிவை அடைஞ்சோம். அந்த ஏரியால டவர் கிடைச்சு எங்க வாக்கி டாக்கி வொர்க் ஆச்சு. அப்புறமென்ன கிட்டத்தட்ட மறு ஜென்மம்தான். போன உயிர் திரும்பி வந்தது. நாங்க தகவல் கொடுத்து அந்த ஏரியா ஃபாரஸ்ட் ரேஞ்சர் தன்னோட‌ டீமோட அங்க வந்தாரு. எங்களை மீட்டு மறத்துப்போன கால்களை சூடாக்கி முதலுதவி செஞ்சு சகஜ நிலைக்குக் கொண்டுவர ஒரு மணிநேரம் ஆச்சு. நானாச்சும் பரவாயில்லை. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மயக்கமாகிட்டார்.  உண்மையிலே இயற்கை ஒரு பேர‌திசயம்தான். அதுக்கு முன்னாடி மனுஷன் ஒண்ணுமே இல்லைனு உணர்ந்த தருணம் அது. இப்ப நான் ஐ.பி.எஸ் ஆபீஸரா பல கடினமான சவால்களை எதிர்கொள்றப்போ மனசுக்குள்ள இமயமலை டிரெக்கிங்கை நினைச்சுச் சிரிச்சுக்குவேன். இயற்கைக்கு முன்னாடி நீயெல்லாம் ஒண்ணுமே இல்லைனு!" என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!