வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (24/07/2018)

கடைசி தொடர்பு:18:15 (24/07/2018)

விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகசூல்; மும்மடங்கு வருமானம் தரும் திரவ உயிர் உரங்கள்!

``மண்ணில் உள்ள நுண்ணியிர்களைப் பாதுகாக்கும் வகையில் திரவ உயிர் உரங்களை இடும்போது, ``உரச்செலவுகள் குறைந்து இரட்டிப்பு மகசூல் மும்மடங்கு வருமானம்" என்ற இலக்கை அடையலாம் என அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் ஜெயங்கொண்டத்தில் 2015-16-ம் ஆண்டு, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.33 கோடி மதிப்பில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது. இத்திரவ உயிர் உர உற்பத்தி மையத்தின் மூலம் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உர வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த உயிர் உரங்கள் பாக்கெட்டுகளில் திட வடிவில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதை 6 மாதங்கள் வரை மட்டும்தான் பயன்படுத்த இயலும். அதன் பிறகு, நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும். இக்குறையைப் போக்கும் வகையில், ஒரு வருட காலம்வரை திறன்மிகு நிலையில் உயிர் காரணிகளின் எண்ணிக்கை குறையாமல் பயன்படுத்தும் பொருட்டு, திரவ நிலையில் உயிர் உரங்கள் உற்பத்தி செய்திட புதிய தொழில்நுட்பத்துடன் கொண்ட ஆய்வகங்கள்  ஏற்படுத்தப்பட்டன. இதனால், நுண் நீர்ப் பாசனங்களின் மூலம் இந்தத் திரவ உயிர் உரங்கள் எளிதில் பயிருக்குச் சென்றடையும் விதமாகவும் திரவ நிலையில் உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் அம்மா திரவ உயிர் உரங்கள் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தத் திரவ உயிர் உரங்களால் சுற்றுச்சூழல் கெடாமல் குறைந்த உரச் செலவில் கூடுதல் மகசூல் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது.

இது குறித்து இம்மையத்தின் வேளாண் அதிகாரிகள் கூறுகையில், "பாஸ்போ பாக்டீரியா மண்ணிலுள்ள கரையாத மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்கு அளித்து தரமான மணிகள் கிடைக்கச் செய்யும். மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகி மண்வளத்தைப் பாதுகாக்கிறது. இந்த  திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால், ரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவிகிதம் வரை குறைக்கலாம். மண்ணின் தழை மற்றும் மணிச்சத்தின் அளவை அதிகரித்து, இரட்டிப்பு மகசூல் மும்மடங்கு வருமானம் என்ற இலக்கை அடையலாம். இந்த திரவ உயிர் உரம் 50 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.