விவசாயியாகப் போராடுபவர்கள் வயலில் இறங்கி வேலை செய்கிறார்களா? - இல.கணேசன் கேள்வி

``காவிரி நீருக்காக விவசாயி என்ற போர்வையில் போராட்டம் நடத்தியவர்களில் தற்போது எத்தனை பேர் நிலத்தில் இறங்கி விவசாயம் செய்து வருகின்றனர்'' என்று பா.ஜ.க எம்.பி இல.கணேசன் கேள்வி எழுப்பினார்.

இல கணேசன்

மதுரை மாவட்டம் மேலூரில் பி.ஜே.பி-யின் மூத்த நிர்வாகி இல.கணேசன் தலைமையில் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். 45 நாள்களுக்கு  அனைத்து இடங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படும். இதில் 15 நாள்கள் நான் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். இது போன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதியில் உள்ள மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்து ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட உள்ளோம். முதல் தொகுதியாக மேலூரில் தொடங்கியுள்ளோம்.

தற்போது பி.ஜே.பி-க்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மக்களின் பிரச்னைக்காகப் போராடாமல் இருப்பதில் வல்லவர். ஸ்டாலின் உட்பட தி.மு.க-வினர் ஆளுநர் மீதான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தெளிவு பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பால் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்வதுபோல, தோல் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலும் தமிழக அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காவிரி நீர் கரைபுரண்டோடும் நிலையில், காவிரி நீருக்காக விவசாயி என்ற போர்வையில் போராட்டம் நடத்தியவர்களில் தற்போது எத்தனை பேர் நிலத்தில் இறங்கி விவசாயம் செய்து வருகின்றனர்'' எனக் கேள்வி எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!