வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (24/07/2018)

கடைசி தொடர்பு:19:08 (25/07/2018)

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல்? முதல்வர் பதவி கோருகிறாரா ஓ.பி.எஸ்?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்கவில்லை. தற்போது, பி.ஜே.பி தலைவர்கள் சிலரையும் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசவுள்ளார்.

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல்? முதல்வர் பதவி கோருகிறாரா ஓ.பி.எஸ்?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச் சந்திப்பதன் பின்னணி குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மக்களவையில் தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, அ.தி.மு.க வாக்களித்த நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லி சென்று பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்து இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டிருக்கின்றன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்கவில்லை. தற்போது, பி.ஜே.பி தலைவர்கள் சிலரையும் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசவுள்ளார். இத்தகவலை ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஓ பி எஸ்  - அ.தி.மு.க. நிர்வாகிகள்

அவரின் இந்தச் சந்திப்புகளின்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், தனக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்டவை குறித்து பி.ஜே.பி தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதிப்பார் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையிலும், தமிழக அரசுக்கு எதிராக மாநில ஆளுநரிடம் தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், `சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்' என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 2001-ம் ஆண்டு அவர், சட்டமன்ற உறுப்பினரானது முதல் இதுவரை சேர்த்துள்ள சொத்து மதிப்பு குறித்து, தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணையும் ஓ.பி.எஸ்-க்கு கடும் நெருக்கடியை அளித்துள்ள நிலையில், அவரின் டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எடப்பாடி - ஓ.பி.எஸ்.

நாடாளுமன்ற மக்களவையில் பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க எம்.பி-க்களின் ஆதரவைக் கோரி, பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, ஓ.பன்னீர் செல்வத்தைப் போனில் தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து, மத்திய அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும் அ.தி.மு.க எம்.பி-க்கள் ஆதரிக்க வேண்டியதில்லை என்று கட்சி நிர்வாகிகள் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் பி.ஜே.பி மேலிடத்துக்குச் சென்றுள்ளதாகவும், அதுபற்றி ஓ.பன்னீர் செல்வத்திடம் பி.ஜே.பி சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்றும் பி.ஜே.பி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஓ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். ஏற்கெனவே ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்கள் டெல்லியில் உள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழகத்தில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து துணை முதல்வர் பேச்சு நடத்துவார்" என்று அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன்  கூட்டணி வைப்பது என்பது குறித்து, அண்மையில் சென்னைக்கு வந்திருந்த பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, மாநில பி.ஜே.பி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தார். அப்போது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் அ.தி.மு.க-வுக்கு வாக்குகள் கிடைப்பது சந்தேகம் என்று அமித் ஷாவிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதேநேரத்தில் டி.டி.வி தினகரன் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் மற்றும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தமிழகத்தில் தேர்தலைச் சந்தித்தால் பி.ஜே.பி-க்கு ஓரளவுக்கு செல்வாக்குக் கிடைக்கும் என்றும், 5 முதல் 10 எம்.பி-க்களையாவது தமிழகத்திலிருந்து பெற முடியும் என்றும் அமித் ஷாவிடம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பி.ஜே.பி தலைவர்களைச் சந்திக்கும்போது, தேர்தல் தொடர்பான வியூகங்களும் விவாதிக்கப்படலாம் என்று அ.தி.மு.க தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோதிலும், எடப்பாடி ஆதரவாளர்கள் மற்றும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ்-க்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவரின் ஆதரவாளர்களின் சிபாரிசுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதால், கடந்த சில மாதங்களாகவே ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருந்து வருகிறார். எனவே, எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாகத் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பி.ஜே.பி மேலிடத்திடம் ஓ.பி.எஸ் வலியுறுத்தக்கூடும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தவிர, அ.தி.மு.க-வை வழிநடத்த வழிகாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இன்னமும் அத்தகைய குழு அமைக்கப்படவில்லை. கூட்டுத் தலைமை, கூட்டாக முடிவெடுக்கும் அதிகாரம் போன்றவற்றை வலியுறுத்தும் அதேவேளையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டும் குழுவை இன்னமும் அமைக்காமல் உள்ளார். எனவே, கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைக்க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதும் ஓ.பி.எஸ்-ன் கோரிக்கையாக இருக்கும் என்று  அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிஅ.தி.மு.க-வுக்குள் இவ்வாறாக ஓ.பி.எஸ். கோஷ்டி, எடப்பாடி கோஷ்டி என்று தனித்தனி அணிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஜினியை அ.தி.மு.க-வுக்குள் கொண்டு வர பி.ஜே.பி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகத் தமிழக பி.ஜே.பி-யினர் தெரிவிக்கிறார்கள். ரஜினியின் மக்கள் மன்றத்துடன் அ.தி.மு.க-வும் இணைந்து, பி.ஜே.பி கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால்தான், தமிழகத்தில் காலூன்ற முடியும் எனப் பி.ஜே.பி மேலிடம் கருதுகிறது.

"அ.தி.மு.க-வில் இணையுமாறு, ரஜினிக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அழைப்புவிட வேண்டும் என பி.ஜே.பி விரும்புகிறது. இந்தக் கோரிக்கையை ஓ.பன்னீர் செல்வத்திடம் பி.ஜே.பி மேலிடம் வலியுறுத்தும் என்று தெரிகிறது. அப்படி, ரஜினி அ.தி.மு.க-வில் இணைந்து விட்டால், அவருக்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பொதுமக்கள் செல்வாக்கையும் அ.தி.மு.க-வுக்கென இருக்கும் வாக்குவங்கியையும் வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெறலாம் என்பது பி.ஜே.பி-யின் கணக்கு" என்கிறார் தமிழக பி.ஜே.பி-யைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர். 

எப்படியாவது, யார் தோளில் சவாரி செய்தாவது தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் திட்டம். ஆனால், தமிழகத்துக்கு பிரதமர் மோடி, பி.ஜே.பி தலைவர் அமித் ஷா வந்தபோதே, "அவர்களைத் திரும்பிச் செல்லுங்கள்" என்ற ரீதியிலான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி, தமிழக பி.ஜே.பி-யினரை கவலையடையச் செய்தது நினைவிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கணக்கு 'வொர்க் அவுட்' அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்தே தெரியவரும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்