ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேச வேண்டும்? - அம்ருதா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி

'பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் இல்லை' என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அம்ருதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், 'ஜெயலலிதாவின் மகள் என்று குறிப்பிடும் அம்ருதா, 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, ஜெயலலிதாவுக்குப் பிறந்ததாக அவரது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கு முந்தைய மாதம் ஜெயலலிதா திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஆவணம் உள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞர், அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்தார். அதை நீதிபதி வைத்தியநாதன் பார்வையிட்டார். மேலும், பெங்களூருவிலிருந்து போயஸ்கார்டனுக்குப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு போலியானது' என்றும் வாதிடப்பட்டது.

அம்ருதா தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, 'அரசு தரப்பில் தாக்கல்செய்த வீடியோவில் போதிய ஆதாரமில்லை. அம்ருதாவின் உண்மையான பெயர் மஞ்சுளா. 2010-ல்தான் அம்ருதா என்ற பெயர் மாற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு, போயஸ்கார்டனுக்கு மஞ்சுளா என்ற பெயரில் போன்கால் வந்தது. அதில், ஜெயலலிதா 242 செகண்டு பேசியுள்ளார்' என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 'அது ராங்கால் என்று பதிலளித்தார். இடைமறித்த நீதிபதி, ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேசவேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்யமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். அதையடுத்து, அம்ருதா தரப்பில் 'ஜெயலலிதா, தீபா, சந்தியா ஆகியோருக்கு ஒரே ரத்தம்தான். அதனால், தீபா ரத்த மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார். தீபா தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததல், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!