சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு!  

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு விசேஷ நாள்களில் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் இக்கோயில் அமைந்துள்ளது. அதனால், கட்டுப்பாடுகள் அதிகம். வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி, ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவிலும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் மழை பெய்ததால், பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

சதுரகிரி மலை

இந்த நிலையில், ஆடி அமாவாசைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள்குறித்து தானிப்பாறை பகுதியில் விருதுநகர் கலெக்டர் சிவஞானம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சிவஞானம், ''சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கொண்டுவருபவர்களுக்கு, அதற்குப் பதில் துணிப்பை கொடுக்கப்படும். தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல மட்டும்  அனுமதிக்கப்படும். ஆடி அமாவாசைத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள 6 நாள்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பக்தர்களின் உடல்நலம் காக்கவும், அவசர சிகிச்சைக்காகவும்  மலைப்பகுதியில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும்''என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!