வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (24/07/2018)

கடைசி தொடர்பு:21:13 (24/07/2018)

திருமாவளவன் பேனர் கிழிப்பால் கூவத்தூரில் பதற்றம்! - போலீஸ் குவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் உள்ள உள்ள நாவக்கால் பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய இரு கட்சிகளுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். இப்பகுதியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகளைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த 21-ம் தேதி, திருமாவளவன் தலைமையில் இரட்டைமலை சீனிவாசனின் 159-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கல்பாக்கத்தில் நடைபெற்றது. அதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே பேனர்கள் வைத்தனர். அவர் வந்துசென்ற அடுத்த நாளே கூவத்தூர் பகுதியில் உள்ள திருமாவளவன் பேனர்களை புரட்சி பாரதம் கட்சியினர் கிழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

திருமாவளவன் பொதுக் கூட்டம் கல்பாக்கம்

இதனால் கோபமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினரை சந்தித்து விளக்கம் கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் கத்தியால் வெட்டிக்கொண்டனர். கலவரத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. கத்தியால் வெட்டப்பட்ட காயங்களுடன்  ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ‘அடங்கா’ அன்பு என்பவரின் சகோதரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் 14 பேர் வீதம், மொத்தம் 28 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் இன்று கூவத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக இருந்துவருகிறார்கள். இந்த நிலையில், கலவரத்தைத் தடுக்க, காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க