துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் நடக்கும் மாதாகோயில் திருவிழா! - பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார் | 2 thousand police personnel to be deployed in thoothukudi panimaya matha festival

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:00:00 (25/07/2018)

துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் நடக்கும் மாதாகோயில் திருவிழா! - பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார்

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா, வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவுக்காக 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார். 

ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 436 வது ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா நாள்களில் தினமும் விசேஷ திருப்பலிகள் நடைபெற உள்ளன. பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.

இத்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தலைமையில் நடைபெற்றது. இதில், பனிமய மாதா ஆலைய பங்குத் தந்தை லெரின் டீரோஸ், காவல்துறை ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி முரளி ரம்பா பேசுகையில், ``பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கெனவே மாநகரம் முழுவதும் உள்ள 243 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம்

இந்நிலையில், திருவிழாவின் பாதுகாப்புக்காக 60 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், மொத்தம் 303 கேமராக்கள் மூலம் திருவிழா நிகழ்வுகள் முழுவதும் கண்காணிக்கப்படும். மாநகரப் பகுதிகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கபட உள்ளன. பக்தர்களின் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் சொல்லப்படும் புகார்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உடனுக்குடன் தீர்க்கப்படும்” என்றார்.

தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிசூடு, கலவரம் சமபவத்துக்குப் பிறகு, மாநகரில் நடைபெறும் திருவிழா என்பதாலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 4 பேர் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், திருவிழாவில் கிறிஸ்துவ மக்களிடையே ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது. இத்திருவிழாவை பயன்படுத்தி மீண்டும் ஏதும் பிரச்னைகள் கிளம்பி விடக் கூடாது என்பதாலும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பங்குத்தந்தைகள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகத் திருவிழாவின்போது சுமார் 1,000 போலீஸார் வரை மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு  2,000 போலீஸார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க