வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (25/07/2018)

கடைசி தொடர்பு:00:30 (25/07/2018)

சொத்துவரி உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்..! தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், சொத்து வரிகளை உயர்த்தியிருப்பது ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கை என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.            

ஜவாஹிருல்லா  

தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சிகளிலுள்ள சொந்தக் குடியிருப்பு, வாடகைக் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத சொத்துகள் ஆகியவற்றின் சொத்து வரிகளை 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தி தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் சொத்து வரி 50 முதல் 100 சதவிகிதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் வரையும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரியின் சதவிகிதம் சிறிதும் ஏற்றுக்கொள்ளும் அளவில் இல்லை. திடீரென 100 சதவிகிதம் வரி கூடுதலானால், நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதேபோல, இந்த வரி உயர்வை வீட்டு உரிமையாளர்கள் பலர் வாடகைதாரர்கள்மீது சுமத்திவிடுவார்கள். இதனால், வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதுப் பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலை காரணமாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் அல்லல்பட்டு வரும் ஏழை எளிய நடுத்தர மக்கள்மீது வரி உயர்வைச் சுமத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. 
உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், வரிகளை உயர்த்தியிருப்பது ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கை ஆகும்.

இந்த வரி உயர்வுக்கு உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, இதே உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல்களை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தி இருந்ததைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறுவது வேடிக்கையானது. உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தி முடித்திருந்தால், இதுபோன்ற அதிக அளவிலான வரி உயர்வைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

எனவே, மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த சொத்துவரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி, உள்ளாட்சிகளுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.